‘கவுதம் அதானி - என்டிஏ’ கூட்டணி: பிரதமர் மோடியின் ‘கமாண்டியா’ கேலிக்கு காங்கிரஸ் பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ‘கமாண்டியா’ என்று பிரதமர் மோடி கேலி செய்ததற்கு பதிலடியாக ஆளுங்கட்சிக் கூட்டணியை GA-NDA (கவுதம் அதானி என்டிஏ) என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருக்கிறார்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மத்தியப் பிரதேசத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி அங்கு கூட்டம் ஒன்றில் பேசும்போது, "இண்டியா கூட்டணியை கமாண்டியா (திமிர்பிடித்த) கூட்டணி அழைத்தார். நிழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கமாண்டியா கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். இந்தியர்களின் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங்கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்க நினைக்கிறார்கள்" என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மீண்டும் அவரின் சிறந்த வேலையைச் செய்ய தொடங்கியிருக்கிறார், அது அவமதிப்பது.'இண்டியா' கூட்டணியை 'கமாண்டியா' கூட்டணி என அழைத்து மீண்டும் அவர் துஷ்பிரயோகத்தை தொடங்கியிருக்கிறார். யார் இதைச் சொல்வது என்று பாருங்கள். அரசு விழாவை எதிர்க்கட்சிகளை அவமதிக்கப் பயன்படுத்தும் ஒருவர் சொல்கிறார். அவரது நிலைக்கு இறங்கி பேசுவது என்றால் அவர் ‘கவுதம் அதானி - தேசிய ஜனநாயக கூட்டணி’க்கு (GA-NDA) தலைமை தாங்குகிறார் என்று ஒருவரால் எளிதாக சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, "டெங்கு , மலேரியா போல சனாதனத்தையும் அழிக்கப்பட வேண்டும்" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சை முன்வைத்து இண்டியா கூட்டணி மீது பாஜக கடும் விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் அதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் இவ்வாறு குற்றம்சாட்டியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE