ம.பி-யின் போஜ்சாலாவில் வைக்கப்பட்ட சிலை உடனடியாக அகற்றம் - பதற்றத்தை தணிக்க போலீஸார் முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தின் தார் நகரிலுள்ள போஜ்சாலாவில், திடீர் என ஒரு சரஸ்வதி சிலை வைக்கப்பட்டு அதுதொடர்பான, காட்சிப் பதிவுகள் வைரலாகின. இதை உடனடியாக அகற்றிய போலீஸார் அங்கு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க முயற்சித்து வருகின்றனர்.

மபியின் தற்போதைய தார் எனும் தாரா பகுதியை ஆண்டுவந்த மன்னர் போஜ். 12 ஆம் நூற்றாண்டில் ஒரு சரஸ்வதி கோயிலை அமைத்து அதில் வேதபாட சாலையை துவக்கியுள்ளார். இப்பகுதியை, போரிட்டுக் கைப்பற்றிய முகலாயப் பேரரசரான அவுரங்கசீப், போஜ்சாலாவை மசூதியாக மாற்றியதாகப் புகார் உள்ளது. இதற்கு ஆதாரமாக அம்மசூதியில் அமைந்த கல்தூண்களில் இந்து தேவிகளின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இதை பொருட்படுத்தாமல், அப்பகுதியின் முஸ்லிம்கள் அங்கு தொழுகையை தொடர்ந்துள்ளனர். இதனால், அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதியை போல் போஜ்சாலாவிலும் ஒரு பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. சுமார் ஒன்றரை ஏக்கரில் அமைந்த போஜ்சாலாவினுள் கல்தூண்களிலான வரலாற்று மண்டபம் அமைந்துள்ளது. இதை இந்துக்கள் வாக்தேவி (சரஸ்வதி) கோயில் எனவும், முஸ்லிம்கள் கமால் மவுலானா மசூதி என்றும் கூறி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும், வருடம் ஒருமுறை வசந்த பஞ்சமியில் இந்துக்கள் பூசையும் நடத்தினர். பாபர் மசூதி இடிப்புக்குப் பின் அதிகரித்த பிரச்சினையால், போஜ்சாலாவில் இரண்டு தரப்பினரையும் அனுமதிக்காமல், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தன் கட்டுப்பாட்டில் வைத்தது. பிறகு, கடந்த ஏப்ரல் 7, 2003 இல் ஒரு வழிகாட்டுதலை ஏஎஸ்ஐ வெளியிட்டது. இதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அப்பகுதி முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதே நிபந்தனையுடன் இந்துக்களும் அதே இடத்தில் செவ்வாய்க்கிழமைகளில் பூசைக்கு அனுமதி கிடைக்கிறது. இச்சூழலில், போஜ்சாலாவில் கடந்த ஞாயிறு நள்ளிரவில் திடீர் என ஒரு சரஸ்வதி சிலை வைக்கப்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்து அதன் காட்சிகளும் செவ்வாய்க்கிழமை சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய ஏஎஸ்ஐ, போஜ்சாலாவினுள் வைக்கப்பட்ட சிலையை அகற்றியது.

அகற்றப்பட்ட இந்த சிலை எங்கு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. இப்பிரச்சினையில் வழக்கு பதிவு செய்து உள்ளே இருந்த சிசிடிவி மற்றும் பாதுகாலவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்சினையில், தார் நகர காஜியான வாகர் சித்திக்கீ, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதில், சிலை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இது, மபி சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சதிவேலை எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், போஜ்சாலா போராட்டக் குழுவின் தலைவர் கோபால் சர்மாவும் ஒரு மனுவை, தார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். அதில், ’போஜ்சாலாவில் பிரதிஷ்டையான சரஸ்வதி சிலையை அகற்றி இருக்கக் கூடாது. அதை மீண்டும் அதே இடத்தில் வைக்காவிடில் போராட்டம் நடத்தப்படும்’ என எச்சரித்துள்ளார். இந்து, முஸ்லிம் வாரம் ஒருமுறை அனுமதிக்கப்படுவதை எதிர்த்து மே, 2022 இல் மபியின் இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளனர். அதில் இந்துக்களை போஜ்சாலாவில் அன்றாடப் பூசைக்கு அனுமதி கோரப்பட்து. இவ்வழக்கில் ஏஎஸ்ஐ, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் தங்கள் பதிலை அளிக்கவில்லை.

இதேபோல், அயோத்தியின் பாபர் மசூதியினுள் ராமர் சிலை வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அங்கு கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது கோயில் கட்டப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE