ஜம்மு காஷ்மீர் | பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் மூவர் வீர மரணம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூவர் வீர மரணம் அடைந்தனர்.

அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மூவரும் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மன்பிரீத் சிங், ஆஷிஷ் தோன்சாக், ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி ஹிமாயூன் முசாமில் பட் ஆகியோர் வீர மரணம் அடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அங்கு நடைபெற்ற மற்றொரு மிகப் பெரிய சம்பவமாக இது கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE