நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முன் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. முன்னதாக, எதற்காக இந்தக் கூட்டம் என்ற தகவலை வெளியிடவில்லை. இந்த சூழலில் இக்கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து முதல் நாளில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்க உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க வரும் 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இதுதொடர்பான அழைப்பிதழ் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், 100-வது சுதந்திர தினம் (அமிர்த காலம்) வருவதற்குள் வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மற்றும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: அண்மையில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் விருந்து அளிப்பதற்கான அழைப்பிதழில், பாரத்குடியரசுத் தலைவர் என இடம்பெற்றிருந்தது. இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதுபோல, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அணைக்கப்பட்டது. இதனால் இதுகுறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE