ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: அமலாக்கத் துறை முன்பு திரிணமூல் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஆஜர்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: அரசுப் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்ததில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்குச் சென்று நேரில் ஆஜரானார். இன்று காலை 11.30 மணி அளவில் அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தை அடைந்ததாகவும், அவரிடம் அரசுப் பள்ளி ஆசிரியர் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கில் தன்னை இணைத்துள்ளதாக அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். மேலும், அமலாக்கத் துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு கூடுதல் மனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். அதில், அமலாக்கத் துறையின் முந்தைய சம்மனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு சம்மனை அமலாக்கத் துறை அனுப்பி இருப்பதாகவும், இது சட்டப்படி தவறானது என்றும் தெரிவித்திருந்தார். ஆசிரியர் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் தன்னை சிக்க வைக்க அமலாக்கத் துறை முயல்வதாகவும், அதன்பொருட்டே தன்னிடம் விசாரணை நடத்த முயல்வதாகவும் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE