நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’

By செய்திப்பிரிவு

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நாட்டில் சட்டத் திருத்தங்களும், புதிய சட்டங்களும் இயற்றப்படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சட்டங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டே வருகின்றன. தற்போது இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதாக செய்திகள் வந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்திலும் ‘‘இந்தியா என்கிற பாரத்’’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டும் ஒன்றுதான் என்றும், பெயர் மாற்ற கூடாது என்றும் வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எந்த ஒரு முக்கிய விஷயமாக இருந்தாலும் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற கூட்டங்களில் விவாதம் நடத்தி முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி இந்தியா, பாரத் பெயர் குறித்தும் வருங்காலங்களில் விவாதம் நடைபெறலாம். ஆனால், விவாதத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். அதற்கு எடுத்துக் காட்டாக கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ‘‘தேசிய கவுரவ காப்பு மசோதா, 1957’’ஐ குறிப்பிடலாம். அப்போது பல்வேறு மாற்று கருத்துகள் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் எப்படி கண்ணியமாக விவாதத்தில் பங்கேற்றனர் என்ற வரலாற்றை மீண்டும் நினைவுப்படுத்துவது சரியாக இருக்கும்.

தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதம் தொடர்ந்து வெளியாகும்.

தேசிய சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்க, ‘தேசிய கவுரவ காப்பு மசோதா, 1957’ மதறாஸ் சட்டமன்றத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் நடந்த வாதங்களுக்குப் பிறகு, வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்திய தேசிய உணர்வுகளுடன் நெருங்கிய, ‘புனிதம்’ என்று கருதப்படக் கூடிய அடையாளங் களை அவமதிக்கும் எல்லாவிதமான செயல் களையும் தடுத்துநிறுத்தும் நோக்கத்துடன்மசோதா தயாரிக்கப்பட் டுள்ளது; தேசியக் கொடியை எரிப்பது, மகாத்மா காந்தியின் உருவப் படங்களையும் சித்திரங்களையும் எரிப்பது, காந்தியின் சிலையை உடைப்பது, அவமதிப்பது போன்ற செயல்களைத் தடுக்க இந்த மசோதா வழி செய்கிறது.

இந்த மசோதாவுக்கான மூல எதிர்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து வெளிப்பட்டது; அதன் தலைவர் சி.என்.அண்ணாதுரை, ‘‘நாட்டின் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்கான வழி சட்டமியற்றுவது அல்ல’’ என்றார் அவர். முதல் கட்ட விவாதங்களுக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. ஆனால் அது போதாதென்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பு நடந்தது. அரசின் மசோதாவுக்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர்.

முன்னதாக, ‘மதறாஸ் தனியார் வனங்கள் காப்பு (திருத்த) மசோதா’ அறிமுகப்படுத்தப்பட சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது.

தேச கவுரவச் சின்னங்களுக்கு அவமரியாதை செய்வதைத் தடை செய்யும் மசோதாவை, மதறாஸ் மாநில அரசின் உள்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் அவையில் முன்மொழிந்து பேசினார். “இந்தச் செயலை, அபூர்வமான ஒன்றுஎன்றுதான் சொல்வேன். இப்படிப்பட்ட ஒரு சட்டம் எனக்குத் தெரிந்து எந்த நாட்டிலுமே இல்லை; விபரீதமாகச் சிந்திக்கவும் செயல்படவும் கூடியவர்கள் இங்கிருப்பதால், மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி, உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. ‘மனநோயாளிகள்’ தொடர்பாகக் கூட ஒரு சட்டம், அரசமைப்பு சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதை உறுப்பினர்கள் அறிவார்கள். வேடிக்கை பார்க்கிறவர்களுக்குப் பொழுதுபோகும் வகையில் தெருவில் மனநோயாளிகள் எதையாவது செய்வார்கள்; சில வேளைகளில் அது சமூகத்துக்கே பெரிய ஆபத்தாகக்கூட மாறிவிடும். எனவே அப்படிப்பட்ட வர்களை எதிர்கொள்ள சட்டம் அவசியப்படுகிறது.

மசோதாவின் நோக்கம்: “தேசியக் கொடி, மகாத்மாகாந்தியின் உருவப் படங்கள்– சித்திரங்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை அவமதிக்கும் செயல்களை முடிவுக்குக் கொண்டுவரஇந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியை அவமதித்தால், அரசமைப்புச் சட்டத்தை எரித் தால், இந்தியதேசிய உணர்வின் அடையாளமாகத் திகழும் சின்னங்களை அவமதித்தால் - அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டமானது புனிதமானது, அந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை ஜனநாயக அடிப்படையில் மாற்றவும் அது இடம் தருகிறது. அரசியல் செல்வாக்கிலும் அந்தஸ்திலும் பெரியவரோ – சிறியவரோ எவராக இருந்தாலும், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பதை சகித்துக் கொள்ளக் கூடாது. தஞ்சாவூரில் நடந்த ‘ஒருமாநாட்டில்’ சுமார் 50,000 பேர் கலந்து கொண்டதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிப்பது என்று அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்திகளிலிருந்து அறிகிறோம். பேரவையின் இப்போதைய தொடர் நவம்பர் 16-ல்முடிவடை வதால், இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற விரும்புகிறோம், அதற்கு அவையின் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார் பக்தவத்சலம்.

என்.கே.பழனிசாமி (கம்யூனிஸ்ட்): இந்த மசோதாவை தெரிவுக் குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற திருத்தத்தை முன்மொழிகிறேன். அரசின் நடவடிக்கைக்குப் பின் உள்ள நோக்கத்தை ஆதரிக்கிறேன், கடந்த இரண்டாண்டுகளாக இம்மாதிரியான செயல்களுக்கு எதிராகச் செயல்படாமல் இருந்துவிட்டு, இந்த நிலைமை ஏற்பட அரசுதான் காரணம்.

கே.ஆர். நல்லசிவம் (சோஷலிஸ்ட்): இந்த மசோதாவை தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது அவசியம். சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடே கிடையாது, அப்படிச் செய்யும் போது எந்த ஒருசமூகத்தையும் குறி வைத்து தாக்கக் கூடாது. பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்திவிட்டால் சாதிகளும் மறைந்துவிடும்.

சி.முத்தையா பிள்ளை (காங்கிரஸ்): தேசத்தின் கவுரவச் சின்னங்களை அவமதிக்கும் செயல்களைத் தடுக்க மதறாஸ் மாநில சட்டமன்றத்தில்மட்டும் இப்படியொரு மசோதாவை நிறைவேற்றிப் பயனில்லை. இந்த இயக்கத்தை நடத்துகிறவர்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றினால் பாண்டிச்சேரிக்கோ, காரைக்காலுக்கோ போய் நடத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இப்படியொரு சட்டம் இயற்றும் பொறுப்பை மத்திய அரசிடம் விட்டுவிடலாம்.

தெரிவுக் குழுவுக்கு விட வலியுறுத்தல்

கே.ராமசந்திரன் (என்டிசி): தேசியக் கொடியைக் காப்பதும் அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாகும். நாட்டு நலனுக்காக மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய அரசமைப்புச் சட்டத்தைஎரிப்பது யாராக இருந்தாலும் - அது அவர்களுடைய கண்ணியத்துக்கு அழகல்ல. இந்த மசோதாவை மேலும் விரிவாகத் தயாரிக்கவும், தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் மட்டுமல்ல அவர்களைத் ‘தூண்டி விடுகிறவர்களையும்’ தண்டிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தவும் இதைத் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.

எஸ்.நாகராஜ மணிகார் (காங்கிரஸ்): இப்படியொரு மசோதாவைக் கொண்டு வராமலேயே இதன் நோக்கத்தைச் செயல்படுத்த வழியிருக்கிறதா என்றும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

பி.எஸ்.சின்னதுரை (பிஎஸ்பி): தேசத்துக்கு விரோதமான செயலைச் செய்யப் போவதாக மிரட்டிய சிலருக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையே இந்த மசோதா உணர்த்துகிறது. பொது மக்களில் பெரும்பாலானவர்களிடம் அவர்களுக்கு ஆதரவோ செல்வாக்கோ கிடையாது. தேசியக் கொடியை அவமதிக்கப் போவதாகக் கூறியவர்களின் மனப்போக்கை இப்படிச் சட்டங்கள் இயற்றி கட்டுப்படுத்திவிட முடியாது. இந்த மசோதாவைத் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.

வி.சங்கரன் (காங்கிரஸ்): தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், காந்தியின் உருவப் படங்கள்ஆகியவற்றை அவமதிக்கப்போவதாக எச்சரித்தவர்களின் செயல்களை முளையிலேயே கிள்ளிஎறிய இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றவேண்டும். தேச பக்தியில்லாமல் இந்த மாநிலத்தில் மட்டுமே இத்தகைய செயல்களில் சிலர் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்; அவர்களுடைய செயல்கள் தேச நலனற்றதாக இருப்பதுடன் அவர்களுக்கே அவமானத்தையும் தேடித் தந்துவிடும்.

அரசின் கொள்கை சரியில்லை

எம்.கல்யாணசுந்தரம் (கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்): இந்த மசோதாவைத் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி எங்களுடைய கட்சி உறுப்பினர் கொண்டு வந்த திருத்தத்தை இந்த மசோதாவைத் தாமதப்படுத்தும் முயற்சியாக அரசு கருதிவிடக் கூடாது, இந்த மசோதாவுக்கு எங்களுடைய கட்சியின் ஆதரவு உண்டு. தேசியக் கொடியையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கப் போவதாக அறிவித்துள்ள இயக்கத்தின் தலைவர், அமைச்சரவைக்கு சாதகமாக அல்லது அமைச்சர்களில் சிலருக்குச் சாதகமாக இருந்தவர்தான். ராமஸ்வாமி நாயக்கரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அரசுக்கு அவர் எப்போதுமே பயங்கரமான எதிராளியாக இருந்ததில்லை என்பது புரியும்.

“பீடித் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அமைச்சர்களில் சிலர் அதை ‘வன்முறை’ என்று கண்டிக்கின்றனர், பிராமணர்களை ஒழித்துவிட வேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறவர்களைக் கண்டிப்பது கூடக் கிடையாது. தேர்தல் சமயத்தில்ராமஸ்வாமி நாயக்கரும் அவருடைய ஆதரவாளர்களும் அளித்த மறைமுக ஆதரவை ஆளுங்கட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தேசியக் கொடியை அவமதிப்போம் என்று மிரட்டும் அளவுக்கு நிலைமை முற்றுவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது?இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளுக்கும் சில பொறுப்புகளை அரசு அளிக்க வேண்டும், எனவே இதை தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.

| தொடரும் |

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE