ஒதுக்கீடு ரூ.990 கோடி, செலவு ரூ.4,100 கோடி... - ஜி20 மாநாடு பட்ஜெட் சர்ச்சையில் காங்கிரஸ் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டுக்கான பட்ஜெட், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநாடு முடிவுற்றதால் பிரதமர் மோடி இனியாவது தேசத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சராசரியாக ஒரு தட்டு உணவின் விலை மதிப்பு 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வேலைவாய்ப்பின்மை 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள கார்கே, நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மணிப்பூர் கலவரம் என கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விரிவாக எழுதியுள்ள அவர், "2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு விடைகொடுக்க மக்கள் ஆயத்தமாகிவிட்டனர். மோடி உண்மையை மறைக்கப் பார்க்கிறார். ஆனால், பொதுமக்களோ உண்மையை மட்டுமே கேட்க விரும்புகின்றனர். திசைதிருப்பும் பிரச்சினைகளை அவர்கள் விரும்பவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு தட்டு உணவின் விலை மதிப்பு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையால் மங்கலாக இருக்கின்றது. மோடி அரசின் மோசமான நிர்வாகத்தால் ஊழல் மலிந்துள்ளது. கணக்கு தணிக்கைத் துறை மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.13,000 கோடி இழப்பு உள்பட பல்வேறு ஊழல்களை தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பட்டியலின் அதிகாரி ஒருவர் ஜல் ஜீவன் ஊழலை வெளிச்சத்துக் கொண்டு வந்ததற்காகவே துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வைரல் ஆச்சார்யா, வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடியை மாற்றக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அவர் எவ்வாறு எதிர்த்தார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது, இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை கண்டிராது இயற்கைப் பேரிடரை மழை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதை மோடி தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மனிதனால் உருவாகும் வன்முறைகள், இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் காணாதவராக பிரதமர் மோடி இருக்கிறார்" என்று கார்கே சாடியுள்ளார்.

எகிறிய பட்ஜெட்... காங்கிரஸ் கேள்வி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக ஜி20 மாநாட்டுச் செலவை முன்வைத்து அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர், "ஜி20 உச்சி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 990 கோடி ரூபாய். ஆனால் பாஜக அரசு அந்த மாநாட்டுக்காக ரூ.4,100 கோடி செலவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உலக நாடுகளின் அரசுகள் பொது நிகழ்வுகளுக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது. இந்தோனேசியா இதே ஜி20 மாநாட்டை நடத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது வெறும் 10 சதவீதம்தான் செலவழித்தது. பாலி உச்சி மாநாட்டுக்கு இந்தோனேசிய அரசானது இந்திய மதிப்பில் ரூ.364 கோடிதான் செலவழித்தது.

அரசாங்கத்தால் உள்நாட்டில் சலுகை விலையில் எரிபொருள் தர இயலவில்லை; விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையைத் தர முடியவில்லை. ஆனால் மாநாட்டுக்கு இவ்வளவு தொகை செலவழிக்கிறது. நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சிக்கலை மறைக்க பாஜக அரசு எத்தனை பூச்சு முயற்சிகளை மேற்கொண்டாலும் முடியாது. பல கோடி ரூபாய் இரைத்துக் கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் வெள்ள நீரில் புகுந்தது பொதுமக்கள் பணம் எப்படி சாக்கடைக்கு வார்க்கப்பட்டது என்பதை சொல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

ரூ.4,100 கோடிக்கான பிரேக் அப்! - இதற்கிடையில், ஜி20 மாநாட்டுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.4100 கோடியில் புது டெல்லி மாநகராட்சி கவுன்சில் (NDMC)-க்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி வளர்ச்சிக் குழுமத்துக்கு ரூ.18 கோடி, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.26 கோடி, பொதுப் பணித்துறைக்கு ரூ.45 கோடி, எம்சிடி- முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் டெல்லிக்கு ரூ.5 கோடி, வெளியுறவு அமைச்சகத்துக்கு ரூ.0.75 கோடி, வனத்துறைக்கு ரூ.16 கோடி, டெல்லி காவல்துறைக்கு ரூ.340 கோடி, இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ITPO)-க்கு ரூ.3600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகையானது ஜி20 உச்சி மாநாட்டுக்கு என்று மொத்தமாக ஒதுக்கப்பட்ட ரூ.900 கோடியைவிட 4 மடங்கு அதிகமாகும். இந்நிலையில்தான் ஜி20 உச்சி மாநாட்டு பட்ஜெட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE