சனாதன சர்ச்சை | அன்பு என்ற பெயரில் வெறுப்பை விற்கிறது இண்டியா கூட்டணி - ஜெ.பி.நட்டா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அன்பு என்ற பெயரில் இண்டியா கூட்டணி வெறுப்பை விற்பதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு ஆதரவாகவும் சனாதன தர்மத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பேசுகிறார். சனாதன தர்மத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாகி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் இது.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும், சோனியா மற்றும் ராகுலும் தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஒரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்? அல்லது அரசியலமைப்பின் விதிகள் பற்றி இண்டியா கூட்டணிக்குத் தெரியாதா?

சனாதன தர்மத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கடைகளில் அன்பு என்ற பெயரில் வெறுப்பை ஏன் விற்கிறார்கள்? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இயங்கும் வெறுப்பு மெகா மால் அது. மக்களைப் பிரித்து ஆள்வதுதான் அதன் நோக்கம்" என விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE