கொஞ்சம் காத்திருங்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும் - முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங்

By செய்திப்பிரிவு

தவுசால்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் சில காலத்தில் தானாகவே இந்தியாவுடன் இணையும் என்று முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கே தேர்தல் ஆயத்தப் பணிகளைப் பார்வையிடச் சென்ற விகே சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறாகக் கூறினார்.

தவுசால் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கொஞ்சம் காத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்" என்றார்.

அண்மையில் சீனா வெளியிட்ட தனது புதிய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தையும் தன்னுடன் உள்ளடக்கி வெளியிட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும், தனது பகுதியாக புதிய வரைபடத்தில் சீனா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலின் பெரும் பகுதியை தனது பகுதியாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், "சீனா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை உள்ளடக்கி வரைபடத்தை வெளியிட்டிருப்பது பழைய பழக்கம். இந்தியா தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் எவை என்பதில் தெளிவாக இருக்கிறது. பிற நாடுகளில் எல்லைகளை தனது என்று உரிமை கோருவது அபத்தமானது" என சீனாவுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE