குறுகிய மனப்பான்மை - ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிய மத்திய அமைச்சர்

By செய்திப்பிரிவு

இந்தூர்: குறுகிய மனப்பான்மை கொண்ட சில கட்சிகள் ஜி20 மாநாடு வெற்றியின்மீது பொறாமைப்பட்டு, வெளிநாட்டு மண்ணில் இதை விமர்சித்து வருகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "உலக அரங்கில் இந்தியா தற்போது ஒரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், சில கட்சிகள் அமைதியின்மையை உணர்கிறார்கள். சிலர் தங்கள் சொந்த திறன்களை வளர்த்துக்கொள்ளாமல், மற்றவர்களின் திறன்களை குறைகூறி வருகிறார்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஜி20 மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்தது. இது வரலாற்று வெற்றி பெற்றது. இந்த உச்சிமாநாட்டின் போது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட டெல்லி பிரகடனம் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை கொண்டுள்ள திட்டமாகும்.

ஜி20 உச்சிமாநாட்டை இந்திய அரசு வெற்றிகரமாக நடத்தியதில் குறுகிய மனப்பான்மை கொண்ட சில கட்சிகள் பொறாமை கொண்டுள்ளன. இதனால் தான், பாரத மாதா மீண்டும் வெளிநாட்டு மண்ணில் விமர்சிக்கப்பட்டார். இதுமாதிரியான எதிர்மறை சக்திகளை இந்திய மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக அவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்" என்று பேசினார்.

ராகுல் காந்தி பேச்சு: முன்னதாக, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெளிநாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அங்கு கூடியிருந்த வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய 2 சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. இரண்டுமே ஏற்கக் கூடியவைதான். ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டப்பட்டதால் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் எரிச்சலை ஊட்டி வருகிறது. அதனால்தான் அவர்கள் பெயரை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் ஆன்மாவை சிதைக்க நினைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்.

சிறுபான்மையினரின் பங்களிப்பை முடக்க பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை முயற்சிக்கின்றன. சிறுபான்மையினர் என்பதாலேயே அவமதிக்கப்படுவார்கள் என்றால் எனக்கு அத்தகைய இந்தியா வேண்டாம். சொந்த தேசத்திலேயே சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது இந்தியாவுக்கு அவமானம்.

சீக்கியர்களும், பெண்களும் இன்னும் பிற சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய 20 கோடி மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது நம் அனைவருக்கும் அவமானம்தானே. அது சரி செய்யப்பட வேண்டும் அல்லவா? இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் அவர் கூறும்போது, “பாஜகவின் கொள்கையில் இந்து மதக் கொள்கை என்று ஏதும் இல்லை. நானும் பகவத் கீதையைப் படித்துள்ளேன். உபநிடதங்களும் கற்றுள்ளேன். எந்த ஒரு இந்து மத நூலிலும் தன்னைவிட வறியவரை துன்புறுத்தச் சொல்லப்பட வில்லை. பாஜகவினர் அவர்கள் கூறிக்கொள்வதுபோல் இந்து தேசியவாதிகள் அல்ல. அவர்கள் அதிகாரத்துக்காக என்ன வேண்டு மானாலும் செய்வார்கள். பாஜக வின் சித்தாந்தத்தில் இந்து அடையாளம் ஏதுமில்லை." என்று பேசியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE