கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் இருக்கிறதா என வங்கக் கடலில் ஆய்வு செய்ய ‘சமுத்ரயான்’ திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலில் இருக்கிறதா என ஆய்வு செய்ய ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த தேசிய கடல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஆகிய விண்கலங்களை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. அந்த வகையில், ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி) ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ‘மத்ஸ்யா 6000’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவரும் இதில் 3 மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், ஹைட்ரோதெர்மல் சல்பைடு மற்றும் காஸ் ஹைட்ரேட்ஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலின் ஆழ்பகுதியில் இருக்கிறதா என ஆய்வு செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

வடக்கு அட்லான்டிக் கடல் பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பாகங்களை பார்வையிடுவதற்காக 5 பயணிகளை சுற்றுலா அழைத்துச் சென்ற டைட்டன் கப்பல் கடந்த ஜூன் மாதம் வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்ஸ்யா கலத்தின் வடிவமைப்பு, அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் மறுஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறும்போது, “மத்ஸ்யா நீர்மூழ்கி வாகனத்தின் முதல்கட்ட சோதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும். சென்னை கடற்கரைக்கு அருகே வங்கக் கடலுக்குள் 500 மீட்டர் ஆழம் வரை இந்த சோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

என்ஐஓடி இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் கூறும்போது, “மத்ஸ்யா திட்டம் 2026-ம் ஆண்டில் இறுதிகட்டத்தை எட்டும். இந்த நீர்மூழ்கி வாகனத்தை 3 பேர் பயணிக்க வசதியாக 2.1 மீட்டர் விட்டம் கொண்டதாக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்” என்றார்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்கள் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்துள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.

மத்ஸ்யா என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு மீன் என பொருள். விஷ்ணுவின் 10 அவதாரங்களில் முதலாவது அவதாரம் மச்ச அவதாரம் ஆகும். இதனடிப்படையில்தான் ஆழ்கடல் திட்டத்துக்கு மத்ஸ்யா என பெயரிட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE