இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் கூட்டம் மும்பையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கூட்டணியின் எதிர்கால திட்டங்களை வகுக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), அபிஷேக் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ரவுத் (சிவசேனா- உத்தவ் பிரிவு), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), ஜாவத் அலிகான் (சமாஜ்வாதி, லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஒமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த சூழலில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE