பார்வையற்ற மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் கைது

ஆந்திரப் பிரதேச மாநிலம், காக்கிநாடாவில் பார்வையற்ற 3 மாணவர்களை அடித்த பள்ளி முதல்வர், நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

காக்கிநாடாவில் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறது. இங்கு முதல்வரும், நிர்வாகியும் 3 மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காட்சிகளும், அவர்கள் மீது ஏறி உட்கார்ந்து அடிப்பது போன்ற காட்சிகளும் ஊடகங்களில் திங்கள்கிழமை வெளியானது. இதை அந்த பள்ளியில் பணியாற்றும் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

இதனை தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், அந்த பள்ளிக்குச் சென்று மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். பார்வையற்ற மாணவர்களை அடித்த பள்ளி முதல்வர் சீனிவாச ராவ், நிர்வாகி சுப்பாராவ் ஆகியோரையும் சரமாரியாக தாக்கினர். இந்த இருவரும் பார்வையில்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனிவாச ராவ், சுப்பாராவ் ஆகியோரை மீட்ட போலீஸார், இருவரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன. இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைதராபாதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 5-ம் வகுப்பு படிக்கும் 45 மாணவ, மாணவிகளை ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததையொட்டி, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில் வீட்டுப்பாடம் எழுதாததால் எல்.கே.ஜி மாணவியை ஆசிரியை சரமாரியாக அடித்தார். இதனால் அந்த மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE