உற்சாகப்படுத்தும் ஒரே நல்ல செய்தி..

By குர்சரண் தாஸ்

நாட்டின் வடமேற்கில் நச்சுக் காற்று மண்டலம், வேலை வாய்ப்பு இழப்புகள், தொந்தரவான ஜிஎஸ்டி என ஏகப்பட்ட சச்சரவுகளுக்கு இடையே, நம்மை உற்சாகப்படுத்த ஒரே ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. அதுதான், உலக வங்கியின் தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி இருப்பது. 10 அம்சங்களிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. எந்த நாடும் செய்யாத சாதனை இது. ஐடிஎப்சியும் நிதி ஆயோக்கும் இணைந்து, 3,200 நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நல்ல பலனைத் தந்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது. குறைந்த அரசு, அதிக நிர்வாகம் என்ற பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் முதல் சான்று இது.

சீனா, அடிப்படை கட்டமைப்புகளை அதிவேகமாக மேற்கொண்டு, ஒரே தலைமுறையில் சீனாவை, அதிக நடுத்தர மக்கள் வசிக்கும் நாடாக மாற்றியது அந்த அரசாங்கம். இந்தியாவின் கதை வேறு. இங்கு தனியார் துறை வெற்றியடைந்துள்ளது. பொதுத் துறை தோல்வியடைந்துள்ளது. அரசாங்கத்தால் அல்ல, தனி மனிதர்களாலேயே இந்தியா முன்னேறியுள்ளது. இந்தியர்கள் சுய சார்புத்தன்மை கொண்டவர்கள். சிக்கனமானவர்கள். முன் னேற வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். அதோடு துணிந்து ரிஸ்க் எடுப்பவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கு இவைதான் முக்கியம். ஆனால் துரதிருஷ்டவசமாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை அரசின் சிவப்பு நாடா நடைமுறையும் அதிகார வர்க்கமும் முடக்கி வருகின்றன.

தொழில் நடத்த சாதகமான விஷயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கூறி கடந்த 15 ஆண்டுகளாக உலக வங்கி வலியுறுத்தி வந்துள்ளது. இதுவரை இருந்த அரசுகள், உலக வங்கியின் தேர்வு முறையைத்தான் குறை கூறி வந்தன. முதன்முறையாக, மோடி அரசுதான் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு மாற்றங்களை கொண்டு வந்ததாக உலக வங்கி கூறியுள்ளது. இந்தியா 142-வது இடத்தில் இருந்தபோது, 50-வது இடத்துக்கு முன்னேற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்தார். அது சாத்தியமாகக் கூடிய விஷயமாகி விட்டது. இந்த வெற்றிக்கு காரணம், மக்கள் - அரசு இடையேயான தொடர்பை ஆன்லைனுக்கு மாற்றியதும் மாநிலங்களிடையே எழுந்துள்ள கடுமையான போட்டியும்தான். நிறுவனங்கள் திவாலா சட்டம் மற்றும் ஜிஎஸ்டி குளறுபடிகள் முடிவுக்கு வந்தபிறகு, இந்தியாவின் தரக் குறியீடு மேலும் அதிகரிக்கும்.

தொழில் நடத்த சாதகமான மாநிலங்கள் வரிசையில் ஆந்திராவும் தெலங்கானாவும் முதலிடத்தில் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன. டெல்லி, கேரளா, அசாம், இமாச்சல், தமிழ்நாடு ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. ஐடிஎப்சி அறிக்கையின்படி, சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தங்களின் தரக்குறியீட்டைக் காட்டி நிறுவனங்களையும் முதலீட்டையும் கவர்கின்றன

எல்லோரும் குறை கூறுவது இந்தியாவின் நீதித்துறையைத்தான். ஒப்பந்தங்களை அமல்படுத்த அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வாங்குபவர், விற்பவர் இடையே பிரச்சினைகள் தீர்ந்தால்தான் தொழில் நடத்த முடியும். ஆனால் இந்தியாவில் வர்த்தகம் தொடர்பான பயிற்சி பெற்ற நீதிபதிகள் மாவட்ட அளவில் இல்லை. ஆன்லைனில் வழக்கு தொடர்பாக படித்துவிட்டு, உடனுக்குடன் தீர்ப்பு வழங்க வகை செய்யும் இ-கோர்ட் வசதியும் இல்லை. இந்தியாவில் தீர்ப்பு சொல்ல ஆகும் நேரத்தை கணக்கில் கொண்டால் அதில் 10-ல் ஒரு பங்கு நேரத்தில் சீனாவில் தீர்வு கிடைத்துவிடும்.

தொழில் நடத்த சாதகமான நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருப்பது ஊழலுக்கு எதிரான நல்ல நடவடிக்கை. ஊழலை ஒழிக்க லோக்பால்தான் சரியான வழி எனக் கூறும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், இந்த விஷயத்தை உணர மறந்துவிட்டார்கள். ஊழல் மலேரியா போன்றது. அதைத் தடுக்க கழிவுநீர் தேங்கும் குட்டைகளை அழிக்க வேண்டும். லோக்பால் என்பது மலேரியா வந்த பிறகு மருந்து சாப்பிடுவது போன்றது. ஊழல்வாதிகளை பிடிப்பதை விடவும் ஊழலை ஒழிப்பதுதான் சிறந்தது.

தொழில் நடத்த சாதகமான நடைமுறைகளால் சாதாரண மக்களின் வாழ்க்கை மேம்படும். இந்த மாற்றம் எப்படி கட்டிட அனுமதி வழங்க டெல்லி மாநகராட்சி எடுத்துக் கொள்ளும் அவகாசத்தைக் குறைத்திருக்கிறதோ, அதேபோல், பிறப்பு சான்றிதழ் வழங்கும் கால அவகாசத்தையும் குறைத்திருக்கிறது. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விடுமுறை எடுக்காமல், ஒரே மணி நேரத்தில் வேலையை முடித்து விடலாம். புது உரிமம் சில நாட்களி்ல் தபாலில் வீடு வந்து சேர்ந்து விடும். அதனால்தான் பிரதமர் மோடி, புதிய நடைமுறைகளால் மக்களின் வாழ்க்கை மேம்படும் என்கிறார்.

தற்போது பட்டியலில் 100-வது இடத்தில் இருக்கும் இந்தியா, இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. மாநிலங்களில் ஒற்றைச்சாளர முறை இருப்பது பலருக்கு தெரியவில்லை. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகள், தொழிலாளர் ஆய்வாளர்களின் லஞ்சப் பிடியில் இருந்து விலகி வெளியே வர வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் இன்னும் சிவப்பு நாடாவில் சிக்கித் தவிக்கிறது. நிலுவையில் உள்ள தொழிலாளர் சட்டங்களையும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டங்களையும் மாநிலங்களவையில் விரைவில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியது அவசியம். உடனடி அனுமதி வழங்கி, பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு பாராட்டும் பதவி உயர்வும் வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். மோடி கொண்டுவந்த இந்த புதிய நடைமுறையை 1991-ம் ஆண்டே அமல்படுத்தியிருந்தால், இந்தியா இப்போது இருப்பதுபோல் இரு மடங்கு செழிப்பாக இருந்திருக்கும். ஊழலும் பெரிதும் குறைந்திருக்கும். இந்த கால தாமதத்தால் சமூக நீதியுடன் வளர்ச்சியையும் தரும் என எதிர்பார்த்த சோஷலிஸம் எதையும் தராததுதான் மிகப் பெரிய சோகம். ஷேக்ஸ்பியர் தனது ரிச்சர்டு 3 நாடகத்தில், துன்பகாலம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்கும் வகையில், வேற்றுமை நிறைந்த குளிர்காலம், பிரகாசமான கோடை காலத்துக்கு வழி விட்டுள்ளது என்பார். இது இந்தியாவுக்கும் பொருந்தும். நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டி, வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டு வரும்போதுதான் நல்ல காலம் வரும். அதை நோக்கி எடுத்துவைக்கும் ஒரு அடிதான் இது.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்