சந்திரபாபு நாயுடு கைது ஏற்புடையது அல்ல: மம்தா பானர்ஜி கண்டனம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மமதா பானர்ஜி கண்டனம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக, அவரை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எவர் ஒருவரையும் யாரும் பழிவாங்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.

மாநிலம் தழுவிய பந்த்: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் மூடியிருக்கின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.

தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே மறியல், தர்ணாவில் ஈடுபட முயற்சிப்பதும் போலீஸார் அவர்களை கைது செய்வதும் நடைபெறுகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்குப் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், விஜயவாடா உள்ளிட்ட சில நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு: ஆந்திரப் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆந்திரப் பிரதேச அரசின் பல்வேறு தோல்விகளை சந்திரபாபு நாயுடு அம்பலப்படுத்தி வருவதால் அவரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பழிவாங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குற்றச்சாட்டுக்கு பதிலடி: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரப் பிரதேச அரசின் ஆலோசகர் சஜ்ஜாலா ராமகிருஷ்ண ரெட்டி, ‘குற்றம்சாட்டப்பட்டவரான சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலால் தெலுங்கு தேசம் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இது அக்கட்சியினர் நடத்தும் நாடகம். சந்திரபாபு நாயுவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றம் இழைத்திருப்பது வெளியாகி உள்ளது. அதை மறைக்க, தெலுங்கு தேசம் கட்சியினர் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

கைதி எண் 7691: ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் 7691 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டு உணவு, மாத்திரை, மருந்துகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் கூடிய அறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருக்கு ஜாமீன் கோரி அவர் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர். இது ஒருபுறம் இருக்க சிஐடி தரப்பில் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. சந்திரபாபு நாயுடுவை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பின்னணி: சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் (2014-19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஆந்திர அரசு 10 சதவீதம் நிதி வழங்கியது. 10 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது.

இதில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிஐடி போலீஸார் 2021ம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்