சுற்றுலாத் துறைக்கு புதிய திசையை வழங்குகிறது ஜி20 டெல்லி பிரகடனம்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 டெல்லி பிரகடனம், சுற்றுலாத் துறைக்கு புதிய திசையை வழங்குவதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலாவின் பங்கு தொடர்பாக கோவாவில் நடைபெற்ற சுற்றுலா தொடர்பான ஜி20 மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம், ஜி20 டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியாவின் தலைமைப் பண்புக்கு, ஜி20 உச்சி மாநாடு ஒரு சான்றாக உள்ளது. உலகின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை காரணமாக ஒருங்கிணைந்துள்ள செல்வாக்கு மிக்க தலைவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள்.

உலகின் சவால்களை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள். நீடித்த நிலையான வளர்ச்சியை அடைவதில் சுற்றுலாத் துறையின் பங்கு குறித்தும், இத்துறையில் உள்ள சவால்கள், தடைகள், வாய்ப்புகள், பரிந்துரைகள் குறித்தும் கோவா மாநாட்டு அறிக்கை மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அம்சங்களில் சுற்றுலாவின் பங்கு குறித்து புதிய பாதையை ஜி20 பிரகடனம் வழங்குகிறது.

பசுமை சுற்றுலா, டிஜிட்டல்மயமாக்கம், திறன், சுற்றுலா சார்ந்த சிறு குறு நிறுவனங்கள், சுற்றுலா நிர்வாகம் ஆகிய 5 அம்சங்கள் சுற்றுலாத் துறையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், உலக நாடுகள் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்த 5 அம்சங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இதன்மூலம், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மேம்படுத்த முடியும் என்றும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கான சுற்றுலா என்ற தலைப்பில் போட்டிகளை நடத்த சுற்றுலாத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கான மேற்சொன்ன 5 அம்சங்களின் அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும். இதற்கான திட்டத்தை, சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் அப்படியே தங்கள் பகுதிகளில் நடத்தலாம். வரும் 27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று போட்டிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE