ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்திய விதம் விதிவிலக்கானது; பிரேசிலுக்கு பொறுப்பு கூடியுள்ளது: அதிபர் லுலா ட சில்வா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்திய விதம் மிகச்சிறப்பானது; விதிவிலக்கானது என தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் லுலா ட சில்வா, இதனால், அடுத்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டை நடத்த உள்ள தங்களுக்கு பொறுப்பு கூடியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி ஜி20 மாநாடு நேற்று நிறைவடைந்தது. முன்னதாக, அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லுலா ட சில்வாவுக்கு முறைப்படி நேற்று வழங்கினார். இந்நிலையில், புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லுலா ட சில்வா, "விதிவிலக்கான முறையில் மிகச்சிறப்பாக ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய இந்தியாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய மக்களின் அன்பான வரவேற்பை நான் பெற்றேன். அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டை நடத்தும் பொறுப்பு பிரேசிலுக்கு உள்ளது. ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்திய விதத்தால் எங்களுக்கான பொறுப்பு கூடியுள்ளது.

ஜி20 அமைப்பின் நிறுவன உறுப்பு நாடு பிரேசில். அடுத்த ஆண்டு நாங்கள் நடத்த உள்ள ஜி20 உச்சிமாநாட்டின் கருப்பொருளாக சமத்துவமின்மை இருக்கும். பாலியல், இனம், கல்வி, சுகாதாரம், ஏழ்மை மற்றும் வறுமை ஆகியவற்றில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஏராளமான சமத்துவமின்மையுடன்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் சமமாக இயங்க வேண்டும். இதற்கு ஏற்ப வளங்களின் பங்கீடு இருக்க வேண்டும். உலகில் 73 கோடி மக்கள் பசியுடன் உறங்கச் செல்லும் நிலை தொடரக்கூடாது. இதற்கு நாம் உச்சபட்ச கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.

இந்தியா நடத்தியதைப் போலவே, நாங்களும் எங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாடுகளை நடத்துவோம். புதுடெல்லி ஜி20 உச்சிமாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஏன் வரவில்லை என தெரியவில்லை. அடுத்த ஆண்டு பிரேசில் நடத்தும் ஜி20 மாநாட்டிற்கு இருவரும் வருவார்கள் என நம்புகிறேன். பிரேசிலில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கும்போது உலகில் போர் இருக்காது என்றும், உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நம்புகிறேன்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு துளியும் இல்லாத வகையில் 90 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பிரேசிலிடம் இருக்கிறது. எனவே, மின்உற்பத்திக்கான கொள்கை மாற்றம் தொடர்பாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் வலியுறுத்துவோம். எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். உலக இயற்கை எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரேசில் ஜி20 உச்சிமாநாட்டில் வலியுறுத்தும். உலக வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு வளர்ந்த நாடுகள்தான் வருகின்றன. மிகச்சிறிய அளவில்தான் உலக வங்கியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, உலக வங்கியின் உறுப்பினர் விவகாரம் தொடர்பாக நாங்கள் விவாதிப்போம். அதேபோல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 1945ல் இருந்த உலக புவி அரசியல் நிலை இன்று இல்லை. 2024க்கு ஏற்ப ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் இதனை நாங்கள் வலியுறுத்துவோம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE