தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: ஆந்திரா, தெலங்கானாவில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில முன்னாள்முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து அமராவதி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நேற்று மாலை 7 மணிக்கு தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் (2014-19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 33 ஆயிரம்கோடி செலவாகும் என தீர்மானிக்கப்பட்டு, அதில் ஆந்திர அரசு 10 சதவீதம் நிதி வழங்கியது. 10 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி ரூ. 40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது. இதில் ரூ. 118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாககடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசு குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக சிஐடி போலீஸார் 2021ம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரஉள்ளதால், முக்கிய எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை துரிதப்படுத்த ஜெகன் அரசு முடிவு செய்துள்ளது.

அதன் பேரில். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணிக்கு, கர்னூல் அருகே உள்ள நந்தியாலம் ஆர்.கே திருமண மண்டபத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தில் உறங்கி கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது 34 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி வழக்குகள் தொடரப்பட்டன. சந்திரபாபு நாயுடு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் 28 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று அதிகாலை 3 மணியளவில் விஜயவாடா அரசு மருத்துவமனையில் அவருக்கு 2-வது முறையாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலை 10 மணியளவில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது மகன் லோகேஷ்உடனிருந்தார். சந்திரபாபு நாயுடு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் வாதாடியதாவது:

17 ஏ-வின் படி முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய ஆளுநரிடம் முன் கூட்டியே அனுமதி பெறவில்லை. ஆதலால், சந்திரபாபு வுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

மேலும், கடந்த 2021-ல் பதியப்பட்ட இவ்வழக்கில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கைது நடவடிக்கை ஏன்? இது அரசியல் பழிவாங்கும் செயல் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. அமைச்சரவையில் வைத்து அதன் மூலம் நிதியை ஒதுக்கீடு செய்ததால், இதில் முதல்வருக்கு சம்பந்தமில்லை. ரூ. 118 கோடி வரை சந்திரபாபு நாயுடுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை யார் வழங்கியது ?எப்படி வழங்கினர் ? என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

மேலும், இவ்வழக்கில் எஃப் ஐ ஆரில் இன்று காலை (நேற்று) நீங்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் அப்போதைய அமைச்சர் அச்சம்நாயுடு ஆகியோரின் பெயர்களை இணைத்துள்ளீர்கள். ஆதலால் இது வேண்டுமென்றே ஜோடித்த பொய் வழக்கு. இவ்வாறு அவர் வாதாடியுள்ளார்.

காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரபாபு நாயுடுவை14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் ராஜமுந்திரி சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்