ஜி-20 உச்சி மாநாடு 2023 | மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி - வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் பைடன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (செப்.10) காலை உலகத் தலைவர்கள் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை டெல்லி ராஜகாட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வருகை தந்தனர். மழைக்கு நடுவே வருகைதந்த தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, வங்கதேச பிரதமர் ஷேர் ஹசினா, சிங்கப்பூர் பிர்டஹமர் லீ ஸிங் லூங் ஆகியோர் முதலில் ராஜ்காட் வந்தடைந்தனர். காந்தி நினைவிடத்துக்கு வந்த ஒவ்வொரு தலைவரையும் அங்கவஸ்திரம் அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். காந்தி குடில் பின்னணியில் அவர்களுக்கு பிரதமர் மோடி அங்கவஸ்திரம் அணிவித்தார். பின்னர் தலைவர்கள் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவிடத்தில் செருப்பு அணிவது மரியாதை நிமித்தமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஷூக்களை தவிர்த்து தட்டையான கால் கவசத்தை அணிந்துகொண்டார். பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் தங்கள் ஷூ, சாக்ஸ் ஆகியனவற்றை அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். அங்கேபக்திப் பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் தலைவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இன்று மதியம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் உணவு வேளையில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.

வியட்நாம் புறப்பட்டுச் சென்ற பைடன்: ஹனோய் புறப்பட்ட பைடன்: இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டுச் சென்றார். அங்கே தலைநகர் ஹனோயில் அவர் அந்நாட்டுத் தலைவருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

வியட்நாமுடன் சீனா எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு வரும் சூழலில் அமெரிக்க அதிபரின் வியட்நாம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE