ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் 15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் 3 நாட்களில் 15 நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு குறித்தும் பல்துறை ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அத்துடன் ஜி20 மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் ஆகியோரையும் பிரதமர் மோடி தனித்தனியாக நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, ‘‘வங்கதேசம் - இந்தியா இடையே வர்த்தக தொடர்பு, மக்கள் தொடர்பு குறித்து பிரதமர் ஹசீனாவுடன் விரிவாக பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது’’ என்றார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கதேசம் - இந்தியா இடையே போக்குவரத்தை அதிகரிப்பது, கலாச்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்’’ என்று தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ் பிரதமர் ஜுக்நாத்தை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் ஜுக் நாத்துடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடிய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் 75 ஆண்டுகளாக தூதரக உறவு இருப்பது மிகவும் சிறப்பானது. ’’ என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் ராவணஹதா, ருத்ரவீணை இசை: மாநாட்டு விருந்தின்போது விருந்தினர் மண்டபத்தில் இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளான ருத்ரவீணை, ராவண
ஹதா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. முன்னதாக காந்தர்வ ஆராத்யம் குழுவினரின் பாரத் வத்ய தர்ஷசனம் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்கள் ராவணஹதா, ருத்ரவீணை போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு மிகவும் அற்புதமான கச்சேரியை நடத்தினர்.

அதன் பின்னர் தபேலா, பியானோ போன்ற கருவிகளைக் கொண்டு கலைஞர்கள் இசைக்கச்சேரியை நடத்தினர். இந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் கச்சேரி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்களின் கச்சேரியும் சிறப்பாக நடந்தேறியது. இந்த இசை நிகழ்ச்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE