மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இந்தியாவுடன் இணைக்க போக்குவரத்து

By செய்திப்பிரிவு

இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லியில் நேற்று ஜி20 மாநாட்டுக்கு இடையில் அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடங்கவுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டமாகும். இதன்மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும்.

இத்திட்டம் அடிப்படை கட்டமைப்பில் மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். உயர்த்தத் தரம், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், நிலையானதாகவும் யாரையும் கட்டாயப்படுத்தாத வகையிலும் இருக்கும். இந்த திட்டம் உலகின் 3 பிராந்தியங்களை இணைப்பதால் செழிப்பைஏற்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் அடிப்படை கட்டமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல், பாதுகாப்பின்மை குறையும். பிராந்திய இணைப்பு அதிகரிக்கவும் இது உதவும்.

இஸ்ரேல், சவுதி அரேபியா இடையே சீரான உறவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாடுகள் இடையே முறையான தூதரக உறவுகள் தொடங்கிய பிறகு இஸ்ரேலும் இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் சண்டை சச்சரவுகளை தீர்க்கவும் ஸ்திரத்தன்மை, பிராந்திய இணைப்புகளை அதிகரிக்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் அதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஜான் ஃபைனர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE