உதயநிதி சனாதன பேச்சுக்கு உ.பி. முதல்வர் கண்டனம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.யின் லக்னோ நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை முதல்வர் யோகி கண்டித்தார். எனினும் அவர் தனது உரையில் அமைச்சர் உதயநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ஒட்டுண்ணி சக்திகளால் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது. இதற்காக முயற்சித்த முகலாய மன்னர்களான பாபர் மற்றும் அவுரங்கசீப்பாலும் அதுமுடியாமல் போனது. சனாதனம்மீது குற்றம் சுமத்தி மனிதநேயத்தை சிலர் குலைக்க முயற்சிக்கின்றனர். சனாதனம் என்பது சூரியனை போல மனித இனத்திற்கு சக்தி அளிக்கிறது. முட்டாள்கள் மட்டுமே சூரியனை நோக்கி உமிழ்வார்கள். அது அவர்கள் மீதே விழும் என்பது இயற்கை.

இந்திய கலாச்சாரம் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும்.கடவுளை அழிக்க முயற்சிப்பவர்கள் தாமாகவே அழிவார்கள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பும் சனாதனம் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இன்று அதன்பெருமையை குறிக்க அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுகிறது. எதிர்க்கட்சியினர் சில்லறைத்தனமாக அரசியல் செய்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது நிச்சயமாக முடியாது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உண்மையை மறைக்கும் முயற்சி நடைபெற்றது. ராவணன் பொய் சொல்ல முயலவில்லையா? இதற்கு முன்பாக இரண்யகாஷ்யப் கடவுளையும், சனாதனத்தையும் அவமதிக்க முயலவில்லையா? இவர்கள் அனைவருமே தனது பொய்யான முயற்சிகளால் அழிவிற்கு ஆளாகினர்.

சனாதனம் என்பது நித்தியமான உண்மை. இதை எவராலும் காயப்படுத்த முடியாது. கடந்த5,000 ஆண்டுகளாக பகவான்கிருஷ்ணர் இவ்வுலகில் மனிதநேயம் வளரப் பாதை அமைத்து வருகிறார். எப்போதெல்லாம் கொடுமைகளும் அநீதிகளும் எழுகிறதோ அப்போது அவற்றை எதிர்க்க பகவான் கிருஷ்ணர் ஒளிவீசி பாதை அமைக்கிறார். தீயசக்திகளை ஒழிக்க கிருஷ்ணரின் மந்திரங்களை ஓதினாலே போதுமானது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE