உக்ரைன் போர் விவகாரம் | ஜி-20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்பு: வரலாறு படைக்கப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உக்ரைன் போர் விவகாரத்தில் சமரசம் எட்டப்பட்டு ஜி-20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. இதன்மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லி பிரகடனத்தை இந்தியா தயாரித்து உள்ளது. இதில் உக்ரைன் போர் தொடர்பான கருத்துகளில் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யாவும் சீனாவும் எதிரணியாகவும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தன.

இதைத் தொடர்ந்து இருதரப்பிடமும் இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி டெல்லி பிரகடனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்பிறகு டெல்லி பிரகடனத்தை ஜி-20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.

புதிய வரலாறு: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஜி20 மாநாட்டில்டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடனும் எண்ணத்துடனும் இந்தப் பிரகடனம் ஏற்கப் பட்டிருக்கிறது. இதன்மூலம் சிறந்த,வளமான மற்றும் இணக்கமான எதிர்காலம் உறுதி செய்யப்படும். ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்த அனைத்து ஜி20 உறுப் பினர்களுக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4 இடங்களில் உக்ரைன் போர் குறித்து சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. அவற்றில் கூறியிருப்பதாவது:

ஐ.நா. விதிகளின்படி..: உலகம் முழுவதும் நடைபெறும் போர்கள், உள்நாட்டு குழப்பத்தால் அப்பாவி மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைன் போர் தொடர்பாக கடந்த ஆண்டு பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் விரிவாக விவாதம் நடத்தப்பட்டது.

இந்த போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். உக்ரைன் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் ஐ.நா. சபையின் விதிகளின்படி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இது போருக்கான காலம்கிடையாது. எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது.

போரால் பாதிப்பு: ஜி-20 அமைப்பு பாதுகாப்பு சார்ந்த அமைப்பு கிடையாது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பாகும். ஆனால் போர், உள்நாட்டு குழப்பங்களால் உலக பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உக்ரைன் போரால் சர்வதேசஅளவில் உணவு தானியம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE