‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதே பிரதமர் மோடியின் நம்பிக்கை: காங்கிரஸ் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதையே நம்புவதாகத் தெரிகிறது என்று அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி புதிய குற்றம்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஊழல் மற்றும் பண மோசடியை ஒழிப்பது குறித்து முந்தைய ஜி20 கூட்டங்களில் சர்வதேச சமூகத்தின் முன்பு பிரதமர் மோடி பேசிய முந்தையp பேச்சுக்களை நினைவுகூர்வது சிறப்பாக இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு பிரிஸ்பனில் நடந்த உச்சி மாநாட்டில், ‘பொருளாதார குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுப்பதை தவிர்க்க, பணமோசடியில் ஈடுபடுபவர்களை நிபந்தனையின்றி நாடு கடத்த, ஊழல்வாதிகள் மற்றும் அவர்களின் செயல்களை மறைக்கும் சிக்கலான சர்வதேச விதிமுறைகள் மற்றும் வங்கி ரகசியங்களைக் குறைக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’ என அழைப்பு விடுத்தார்.

2018-ம் ஆண்டு பியூனோஸ் ஏரியஸில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் சொத்துகளை முடக்கவும் 9 அம்ச கொள்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். உயர்மட்ட ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக தீவிரமாக இல்லாமல், அதற்கு உடந்தையாக இருந்தால் பிரதமரின் வெட்கக்கேடான செயல் நகைப்புக்குரியதாக இருக்கும்.

தனது நெருங்கிய நண்பர்களான அதானிகளுக்கு சாதகமாக துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் மற்றும் சாலை என முக்கியமான துறைகளில் அவர்களின் ஏகபோங்களை உருவாக்க எளிமையாக உதவி மட்டும் செய்வில்லை. செபி, சிபிஐ, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் தீவிர முறைகேடு புலானய்வு அலுவலகங்களில் அதானிகளுக்கு எதிரான முறைகேடு விசாரணையை திட்டமிட்டுத் தடுத்துள்ளார்.

வரி ஏய்ப்பு புகலிடங்கள் அவரது நண்பர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதையும், அதிகப்படியான வங்கி ரகசியங்கள் மற்றும் சிக்கலான சர்வதேச விதிமுறைகளின் பாதுகாப்பை அவர்கள் தொடர்ந்து அனுபவிப்பதையும் இது உறுதி செய்கிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தனது அறிக்கை ஒன்றின் மூலம் முறைகேடு மற்றும் குறைந்த மதிப்பில் பங்குகளை கையாண்டது என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மீது கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இருந்த போதிலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில், இந்த விவாகரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம் சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE