பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து 4 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி சொத்து மீட்பு - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

உள்நாட்டில் பொருளாதார மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி நீதியை பெற்றுத்தருவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அத்தகைய குற்றவாளிகளிடமிருந்து 180 கோடி டாலர் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான சொத்துகளை மத்திய அரசு மீட்டுள்ளது. இதற்கு பண மோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) மிகவும் உதவியுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரையில் பொருளாதார குற்றவாளிகளின் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2005 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார மோசடியாளர்களில் சராசரியாக நான்கு குற்றவாளிகள் மட்டுமே இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டனர். ஆனால், 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 19 குற்றவாளிகள் அல்லது வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2022-ல் 27 ஆகவும், 2021-ல்18 ஆகவும் இருந்தது. சமீபஆண்டுகளில் வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் பண மோசடியாளர்களை இந்தியாவுக்கு நாடுகடத்துவதில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சிபிஐ-யின் செயல்பாடுகள் சாமானியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்றவாறு சிபிஐ தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. விசாரணைகளை கையாள சிறப்பு புலனாய்வு பிரிவுகளையும் அது நிறுவியுள்ளது. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE