டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தீவிர பரிசோதனை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பல வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சார்பில் விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். விருந்தினர்களது உணவின் பாதுகாப்பு மற்றும் ருசியை உறுதிபடுத்த 18 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், மத்திய உணவுத்துறையை சேர்ந்தவர்கள்.

இக்குழுவானது ஜி20 விருந்தினர்களின் தேநீர் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் பரிசோதனை செய்த பின்பே பரிமாற அனுமதிக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் 23 நட்சத்திர விடுதிகளில் ஜி20 விருந்தினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதிகளிலும், உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானின் பாரத மண்டபத்திலும் பரிமாறும் உணவு வகைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

உணவு சமைப்பதற்கு முன்அதன் பொருள்களும் பரிசோதிக்கப்படுகின்றன. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு தரமான உணவுகிடைப்பதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உணவுப் பொருட்கள் பரிசோதனையின் முடிவுகள் விரைவில் கிடைக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியிலுள்ள காவல்துறையின் சில அதிகாரிகளுக்கு உணவு பரிசோதனை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜி20 விருந்தினர்களுக்கு இந்திய கலை, கலாச்சாரத்தை பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகளில் முன்னிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 26 திரைகளில், இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாறு திரைகளில் தோன்றும். இதில், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் முதல் தற்போதைய நவீன காலம் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முகலாயப் பேரரசர் அக்பர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் வரலாறு, வேதகாலம், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட காவியங்களின் சம்பவங்களும் காட்சிப்படுத்தபடுகின்றன.

இத்துடன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் ‘கிராப்ட் பஜார்’ எனும் பெயரில் இடம்பெற உள்ளது. ரிசர்வ் வங்கி சார்பிலும் டிஜிட்டல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த டிஜிட்டல் புரட்சியும் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE