டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா சாதனை; 6 ஆண்டுகளில் பெரும் மாற்றம் - ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலக வங்கி அறிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘டிஜிட்டல் கட்டமைப்பில் 47 ஆண்டு கால பயணத்தை வெறும் 6 ஆண்டுகளில் செய்து காட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது’’ என்று உலக வங்கி பாராட்டி உள்ளது.

ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகள் தொடர்பாக மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி நேற்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மக்களுக்கு அரசின் நிதிச் சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்ய, ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன்கள் இல்லாமல் போயிருந்தால் 47 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இந்தியா இந்த வளர்ச்சியை வெறும் 6 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளது.

ஜன் தன் வங்கி கணக்கு: பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டம் அறிமுகமான போது, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 14.72 கோடி வங்கிக் கணக்குகள்தான் தொடங்கப்பட்டன.

ஆனால், 2022 ஜூன் கணக்குப்படி 46.20 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் 26 கோடி பேர் பெண்கள். இதற்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பங்கு மிகப்பெரியது.

மேலும், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை பரவலாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பயனாளிகளுக்கு எளிதான, வங்கி நடைமுறைகள், தனியார் பங்களிப்பும் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. யுபிஐ மூலம் கடந்த மே மாதம் மட்டும் 941 கோடி முறை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.14.89 டிரில்லியன் ஆகும்.

பொதுமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதால், 2022 மார்ச் நிலவரப்படி இந்திய அரசுக்கு 33 பில்லியன் டாலர் மிச்சமாகி உள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி.யில் 1.14 சதவீதம்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்திறன் அதிகரித்துள்ளது. அந்நிறுவனங்கள் சந்தித்த சிக்கல்கள், மோசடிகள், செலவுகள் மற்றும் நேரம் ஆகியவை வெகுவாக குறைந்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE