உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் - ஜோ பைடன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்துள்ளார்.

அமெரிக்க அதிபரான பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையம் வந்த அவரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தனது மகளுடன் அப்போது உடன் இருந்தார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடன நிகழ்ச்சியை அதிபர் ஜோ பைடன் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து, அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை எண் 7, லோக் கல்யான் மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், MQ-9B ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இன்றைய சந்திப்பில் இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி மிஸ்டர் பிரைம் மினிஸ்டர். இன்று மட்டுமல்ல, G20 முழுவதும், வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாத வகையில், அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்பதை உறுதிப்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE