மூன்று நாடுகளின் தலைவர்களுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள தமது இல்லத்தில் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, மொரிஷீயஸ் பிரதமர் குமார் ஜெகந்நாத் உள்ளிட்டோர் புதுடெல்லி வந்துள்ளனர்.

தலைநகருக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களை மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் தமது இல்லத்தில் இன்று இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் வாய்ப்பளிக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: "இன்று மாலை, எனது இல்லத்தில் மூன்று இருதரப்பு சந்திப்புகளை நான் நடத்தவிருக்கிறேன். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் , வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரை சந்திக்க உள்ளேன். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் ஒரு வாய்ப்பை வழங்கும்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE