நவம்பர் 9, 10-ம் தேதிகளில் சர்வதேச சிறுதானிய மாநாடு: ஒடிசா அரசு நடத்துகிறது

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: சர்வதேச சிறுதானிய மாநாடு ஒடிசாவில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில அரசின் உயரதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: சர்வதேச சிறுதானிய மாநாட்டை ஒடிசா அரசு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. சிறுதானிய பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் சிறுதானிய உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம், ஒங்கிங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவது உட்பட அவற்றின் சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

2021-ம் ஆண்டு ஊட்டச்சத்து தானியங்கள் தொடர்பான தேசிய மாநாட்டில், சிறுதானிய ஊக்குவிப்பில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான விருதை ஒடிசா பெற்றுள்ளது. மேலும் சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தியதில் சிறந்த மாநிலமாக மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில்2022-ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022-23 நிதியாண்டில் சுமார் 6.04 லட்சம் குவிண்டால் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. 2023-24 நிதியாண்டில் 8 லட்சம் குவிண்டால் கேழ்வரகு கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE