அயோத்தி சரயு நதியில் கப்பல் சேவை இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தர பிரதேசம், அயோத்தி நகரின் சரயு நதியில் இன்று சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையொட்டி அயோத்தி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள்,பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியின் சரயு நதியில் இன்று சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அயோத்தி மாநகராட்சி ஆணையர் விஷால் சிங் கூறும்போது, "ஜடாயு என்ற பெயரில் அயோத்தி சரயு நதியில் வெள்ளிக்கிழமை சொகுசு கப்பல் சேவையை தொடங்க உள்ளோம். இந்த கப்பலில் ராமாயணத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன.

நயா படித்துறையில் இருந்து குப்தர் படித்துறைக்கு சொகுசு கப்பல் இயக்கப்படும். சொகுசு கப்பல் சேவையின்போது சரயு நதியில் நடைபெறும் தீபாராதனையும் பார்க்க முடியும்" என்றார்.

சொகுசு கப்பல் சேவையை நடத்தும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள அயோத்தியா க்ரூசே லைன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராகுல் சர்மா கூறும்போது, "ஜடாயு சொகுசு கப்பலில் ஒரே நேரத்தில் 100 பேர் பயணம் செய்ய முடியும். ஒரு நபருக்கு தலா ரூ.300 கட்டணம் நிர்ணயித்துள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE