ரூ.118 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்திரபாபுவை கைது செய்ய வேண்டும் - ஆந்திர அமைச்சர் ரோஜா வலியுறுத்தல்

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: ரூ.118 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சந்திரபாபு நாயுடு கண்டிப்பாக கைதாக வேண்டும் என ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி காலத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘‘இந்த பொய் வழக்கில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்’’ என சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிதுறை அமைச்சர் ரோஜா விஜயவாடாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: ரூ. 118 கோடி ஊழல் செய்த சந்திரபாபு நாயுடு கண்டிப்பாக கைதாக வேண்டும். அவர் சிறைக்கு செல்வது உறுதி. அப்படி சிறைக்கு சென்றால் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். என்.டி. ஆரின் ஆத்மாவும் சாந்தி அடையும்.

ரூ. 118 கோடி ஊழலை எதிர்கொள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தைரியம் இருக்கிறதா? இல்லை, நடிகர் பாலகிருஷ்ணாவை போல் ‘மெண்டல்’ சான்றிதழ் வாங்கி கொண்டு தப்பித்துக் கொள்வாரா? இல்லை, விஜய் மல்லைய்யா போல் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விடுவாரா? சந்திரபாபு நாயுடு மீது அலிபிரியில் குண்டு வெடித்த போது கூட அவர் மீது அனுதாபம் வந்து மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவில்லை.

2019 தேர்தலுக்கு முன்பு கூடமோடி என்னை கைது செய்து விடுவார் என புலம்பி நாடகமாடினார். கண்டிப்பாக இவ்வழக்கில் சந்திரபாபு கைதாக வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரோஜா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE