“திமுக தலைவர்களின் கருத்துகளை ஏற்கவில்லை” - சனாதன சர்ச்சையில் விலகி நிற்கும் காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்துகளை தாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா, "அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும், அனைவரின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். எவர் ஒருவரும் வேறொருவரின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது. இதுபோன்ற கருத்துகளை அரசியல் சாசனமும் ஏற்கவில்லை; காங்கிரஸ் கட்சிக்கும் இதில் நம்பிக்கை இல்லை.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் பார்த்தால், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கொள்கையை நாங்கள் எப்போதும் கொண்டிருந்தது தெரியும். அரசியல் சாசன விவாதங்களின்போதும் நாங்கள் இதை வெளிப்படுத்தி இருக்கிறோம். அரசியல் சாசனமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் இதில் மாறுபட வாய்ப்பே இல்லை.

திமுகவின் கருத்தை ஏன் கண்டிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். அவர்களின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். இது குறித்து திமுகவுக்கு எந்த வலியுறுத்தலையும் நாங்கள் முன்வைக்க மாட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மதத்தையும் மதிக்கக் கூடியவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஒருவரின் கருத்தை திரித்துப் பேச வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. இவ்வாறு திருத்திப் பேசுவது பிரதமருக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தால், அவர் திரித்துப் பேசட்டும். ஆனால், இந்தியக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அனைத்து நம்பிக்கைகள், மதங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

குறிவைக்கப்பட்டும் ‘இண்டியா’ கூட்டணி: முன்னதாக, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி இருப்பதன் மூலம் இண்டியா கூட்டணியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அதேபோல், ‘சனாதனம் என்பது எச்.ஐ.வி வைரஸைப் போன்றது’ என நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ‘இண்டியா கூட்டணிக்கு ஆழமான இந்து ஃபோபியா இருப்பதையே இது காட்டுகிறது’ என விமர்சித்துள்ளது. | வாசிக்க > சனாதனத்தை எச்ஐவி உடன் ஒப்பிட்ட ஆ.ராசா - ‘இண்டியா’ கூட்டணிக்கு ‘இந்து ஃபோபியா’ இருப்பதாக பாஜக சாடல்

வலுக்கும் சர்ச்சை: சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, முன்னாள் நீதிபதிகள், எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர். சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசியது தொடர்பாக உதயநிதிமீது உத்தர பிரதேச காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடந்தது. சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், “எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் மட்டுமேபதில் அளிக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க தேவை இல்லை.

சனாதனம் குறித்து தவறாகயாராவது பேசினால் அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும். சனாதனம் குறித்த உண்மைகளை அறிந்துகொண்டு, எதிர்க்கட்சி தலைவர்களை மத்தியஅமைச்சர்கள் எதிர்கொள்ளவேண்டும். அதேநேரம், அளவுடன் எதிர்வினையாற்றுங்கள். வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உண்மை தகவலை மட்டும் பேசுங்கள். சனாதன சர்ச்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்” என்று அவர் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன? - "ஒரு செய்தி வந்தால், அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். | விரிவாக வாசிக்க > சனாதன சர்ச்சை | உதயநிதி பேசியதன் விவரம் அறியாமலேயே பிரதமர் பேசலாமா?- முதல்வர் ஸ்டாலின் கேள்வி

இதனிடையே, "9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி - மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் - சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடர்வோம்" என திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது விரிவான அறிக்கை > 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்