வேலைவாய்ப்பு கோரிய பெண்... நிலவுக்கு அனுப்பலாம் என ஹரியாணா முதல்வர் கிண்டல் - ஆம் ஆத்மி கண்டனம்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலை கொண்டுவர வேண்டி கோரிக்கை விடுத்த பெண்ணை நிலவுக்கு அனுப்புவதாகக் கூறி கிண்டல் செய்த ஹரியாணா முதல்வருக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் வேலைவாய்ப்பை உருவாக்க தங்கள் பகுதியில் தொழிற்சாலை கொண்டுவர வேண்டும் எனக் கேட்க, அதற்கு அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘அடுத்த முறை நிலவுக்குச் செல்லும் சந்திரயான்-4 விண்கலத்தில் உங்களையும் சேர்த்து அனுப்புவோம்’ என்று கூறிய வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அவ்வாறு சொல்ல கூட்டத்தில் இருக்கும் அனைவரும் சத்தமாக சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களைப் பார்த்து பகடி செய்கிறார்கள். வெட்கக்கேடான நிகழ்வு. அந்தப் பெண் செய்த குற்றம், வேலைவாய்ப்புக்காக தங்கள் பகுதியில் ஒரே ஒரு தொழிற்சாலை உருவாக்கக் கேட்டதுதான். இதே கேள்வியை மோடியின் பில்லியனர் நண்பர்கள் கேட்டிருந்தால், கட்டார் அவர்களை ஆரத்தழுவி வரவேற்று ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் அவர்களின் சேவைக்காகப் பணித்திருப்பார்" என்று பதிவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE