‘இண்டியா’ கூட்டணியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது: சனாதன சர்ச்சையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி இருப்பதன் மூலம் இண்டியா கூட்டணியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

டெங்கு, மலேரியா, கரோனாவைப் போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்திப் பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் இன்றும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "சனாதன தர்மம் குறித்த இண்டியா கூட்டணியின் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் உண்மை முகம். 28 கட்சிகள் கொண்ட இந்தக் கூட்டணி நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது. இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்; நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதுதான் அவர்களின் உண்மையான முகம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். அவர் பேசி 5 நாட்கள் ஆகிவிட்டன. இது குறித்து இதுவரை ராகுல் காந்தியோ, நிதிஷ் குமாரோ, லாலு பிரசாத் யாதவோ எதுவும் பேசவில்லை. அவர்கள் அமைதியாக இருக்கிறாரகள். அவர்கள் எப்போது பேசுவார்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "சனாதன தர்மத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற முடிவை எங்கே எப்போது எடுத்தீர்கள் என சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நான் கேட்க விரும்புகிறேன். இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடந்ததே, அங்கு இந்த முடிவு எடுக்கப்பட்டதா? சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட இண்டியா கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களின் உணர்வை சிதைக்கவோ, சனாதன தர்மத்தை பலவீனப்படுத்தவோ முகலாயர்களாலும் முடியவில்லை, ஆங்கிலேயர்களாலும் முடியவில்லை. எனவே, அதைச் செய்ய இவர்கள் யார்?" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE