நிலா, பூமியை படம் பிடித்த ஆதித்யா-எல்1: இஸ்ரோ பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவை படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து, கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. தற்போது புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் பயணித்து வருகிறது.

இதன் சுற்றுப்பாதையை படிப்படியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதித்யா-எல்1ல் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவையும் படம் பிடித்துள்ளது.

அதனை இஸ்ரோ தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 41 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள படங்கள் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்ட படம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமார் 4 மாத கால பயணத்துக்கு பிறகு, 2024 ஜனவரி தொடக்கத்தில், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 ஆராய உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE