நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரன் பாஜகவில் இருந்து விலகல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரபோஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் தொலைநோக்குப் பிரச்சாரத்தின் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை எனக் கூறி சந்திரபோஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நான் பாஜகவில் இணைந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவேன் என்று என்னிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. பாஜகவின் மேடையில் இவர்களின் சித்தாந்தங்களை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்பதே என் புரிதலாக இருந்தது.

சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகங்களையும் பாரதியராக (இந்தியராக) இணைக்க வேண்டும் என்ற நேதாஜியின் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பாஜகவின் கட்டமைப்பிற்குள் ஆசாத் ஹிந்த் மோர்ச்சாவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டதாக என்னிடம் சொல்லப்பட்டது. நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க இது அவசியம்.

இந்த நோக்கங்களை அடைவதற்கான எனது முயற்சிகளுக்கு பாஜகவிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை. மேற்குவங்கத்துக்கு ஒரு விரிவான முன்மொழிவை கொடுத்தேன். ஆனாலும் எனது பரிந்துரைகள் அனைத்து புறக்கணிக்கப்பட்டன" என்று விலகல் கடிதத்தில் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரபோஸ் கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டில் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் 2016 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தல் என பாஜக சார்பில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிடவும் செய்தார்.

விரைவாக கட்சியின் மாநில தலைமைக்கும் இவருக்கும் மோதல் போக்கு ஆரம்பித்தது. இதனால் பல பிரச்சனைகளில் மாநிலத் தலைமையை சீண்டிய சந்திரபோஸ் 2019ல் பாஜக கொண்டுவந்த சிஏஏவை வெளிப்படையாக எதிர்த்தார். இதனால் 2020ல் கட்சியின் மறுசீரமைப்பின் போது மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE