“இந்தியா என்ற பெயரை எதிர்த்தவர் ஜின்னா தான்” - சசி தரூர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இந்தியா என்ற பெயரை பாகிஸ்தானை நிறுவிய தலைவர் முகமது அலி ஜின்னா தான் எதிர்த்தார். ஏனெனில், இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ் அரசின் வாரிசாக நம்மையும், பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து வெட்டுண்டுபோன தேசம் என்றும் அடையாளப்படுத்தியதால் அவர் அந்தப் பெயரை எதிர்த்தார். அந்த வழியில் இப்போது ஜின்னோவோடு இயைந்து பாஜகவும் எதிர்க்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், "அரசியல் சாசனப்படி இந்தியாவை பாரத் என அழைக்க ஆட்சேபம் இல்லை. ஆனாலும், கணக்கிட முடியாத பிராண்ட் மதிப்பு கொண்ட ‘இந்தியா’ என்ற பெயரை முழுமையாக கைவிடும் முட்டாள்தனமான முடிவை மத்திய அரசு எடுக்காது என நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று பகிர்ந்துள்ள கருத்தில், "பாரத் சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கும் இவ்வேளையில் ஒரு விஷயத்தை நாம் நினைவுகூர்வோமாக. இந்தியா என்ற பெயரை எதிர்த்தவர் முகமது அலி ஜின்னா தான். பிரிட்டிஷ் அரசின் வாரிசாக இந்தியா உருவெடுத்ததால் பாகிஸ்தான் அதிலிருந்து பிரிந்து சென்ற நாடாக அறியப்படும் என்பதால் இந்தியா என்ற பெயரை அவர் எதிர்த்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஜின்னாவின் கொள்கையை ஆதரித்ததுபோல் இப்போது ஜின்னாவின் மற்றொரு விருப்பத்தையும் பாஜக ஆதரித்துக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை பாஜக இண்டியா கூட்டணியின் பெயரால் இந்தியா என்ற பெயரைவிடுத்து பாரத் என்று தேசத்தின் பெயரை மாற்றினால், கூட்டணியானது BHARAT என்றே பெயரை மாற்றிக் கொள்ளலாம், அதாவது மேம்பாடு, நல்லிணக்கத்துக்கான பொறுப்பான நாளைக்கான முன்னெடுப்பு (Betterment, Harmony And Responsible Advancement for Tomorrow) என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ”இந்தியா, பாரத் பெயர்கள் சர்ச்சையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நாட்டில் எந்த ஒரு கட்சியும் இந்த இரு வார்த்தைகளையும் கட்சியின் பெயராகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE