2-வது முறையாக ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 2-வது முறை வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 19,500 கி.மீ தூரமும் கொண்ட புவிநீள்வட்ட சுற்றுப் பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டுமையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரத்தை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் 2-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுப்பாதை உயரம் அதிகரிப்பு: இதுதொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பூமியை நீள்வட்ட பாதையில் ஆதித்யாவிண்கலம் சுற்றி வருகிறது. பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்படு கிறது. முதல்கட்டமாக செப்.3-ம் தேதி அதிகரிக்கப்பட்டது. 2-வது முறையாக கடந்த 4-ம் தேதி நள்ளிரவில் விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 282 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 40,225 கி.மீ. தூரமும் கொண்ட புவிவட்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேபோல, 3 முறை விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் மாற்றப்படும்.

அடுத்த கட்டமாக, ஆதித்யாவின் பயணப் பாதை செப்.10-ம் தேதிமாற்றி அமைக்கப்படும். அதன்பிறகு, புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கிவிண்கலம் பயணிக்கத் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 4 மாத கால பயணத்துக்கு பிறகு, 2024 ஜனவரி தொடக்கத்தில், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE