'பாரத்' விவகாரம்: வெளியுறவுத் துறை கருத்து தெரிவிக்க மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என உள்ளது குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், இந்த புதிய மாற்றம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் திட்டம் இருப்பதாக பரவும் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

அதேநேரத்தில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இது எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. பாரதம்தான் நமது அறிமுகம். அதில் எங்களுக்கு எப்போதுமே பெருமிதம். பாரதம் என்பதற்கு குடியரசுத் தலைவர் முன்னுரிமை அளித்திருக்கிறார். காலனிய ஆதிக்க மனோபாவத்தில் இருந்து வெளிவருவதற்கான மிகப் பெரிய அறிவிப்பு இது" என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "காங்கிரஸ் கட்சி இதனை விமர்சித்துள்ளது. அனைத்தையும் அவர்கள் பிரச்சினையாக ஆக்குகிறார்கள். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. நான் ஒரு பாரதவாசி. எனது நாட்டின் பெயர் பாரதம் என்றுதான் இருந்தது; வரும் காலத்திலும் இது பாரதமாகத்தான் இருக்கும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சினை இருக்குமானால், அவர்கள் தங்களைத் தாங்களேதான் சரிபடுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் கூறுகையில், "இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தைய பயன்படுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் வலியுறுத்துகிறது. நம்மை இழிவாக குறிப்பிடுவதற்காக ஆங்கிலேயர் வைத்த பெயர் இந்தியா. பாரதம் என்ற வார்த்தை நமது கலாச்சாரத்தின் அடையாளம். நமது அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட்டு பாரதம் என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுசில் மோடி, "நமது அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரதம் இரண்டும் இருக்கிறது. இந்திய குடியரசுத் தலைவர் என்றுதான் கடந்து 75 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்தது. பாரத குடியரசுத் தலைவர் என எழுதுவதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது? இந்திய மாதாவுக்கு ஜே என நாம் சொல்வதில்லை. பாரத மாதாவுக்கு ஜே என்றுதான் சொல்கிறோம். இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது. பாரதம் என்று எழுதுவதில் யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் இந்தியா என்று எழுதலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் குறித்து காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9 நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வந்துள்ளது. அதில் வழக்கத்துக்கு மாறாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 1 இனி இந்தியா என்றழைக்கப்பட்ட பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என வாசிக்கப்படும்போல. மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "பா.ஜ.க.வின் நாசகார புத்தியால் மக்களை எப்படி பிரிப்பது என்றுதான் சிந்திக்க முடியும். இந்தியர்களுக்கும் பாரதியர்களுக்கும் இடையே மீண்டும் பிளவை உருவாக்குகிறார்கள். நாம் தெளிவாக இருப்போம் - நாம் ஒருவரே! அரசியல் சாசனத்தின் பிரிவு 1, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறுகிறது. இண்டியா கூட்டணியைக் கண்டு அவர்கள் அச்சப்படுவதால் இதுபோன்ற அற்ப அரசியலைச் செய்கிறார்கள். பிரதமர் மோடி, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனாலும், பாரதம் இணையும்; இண்டியா வெல்லும்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: “பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம்: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "சில கட்சிகளின் கூட்டணி இந்தியாவாக மாறினால், நாட்டின் பெயரை மாற்றுவார்களா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. இண்டியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்றினால், இவர்கள் என்ன நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவார்களா? இது என்ன நகைச்சுவையாக உள்ளதே? வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவான வாக்குகள் குறையும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான், அது பாரத் என பெயரை மாற்றி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சித்தராமையா கருத்து: பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "நமது அரசியலமைப்பில், 'இந்திய அரசியலமைப்பு' என்பது இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை. மாறாக, 'பாரத்' என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மம்தா கருத்து: கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்தியாவின் பெயரை அவர்கள் (மத்திய அரசு) மாற்றியுள்ளனர். ஜி 20 உச்சி மாநாட்டு விருந்து அழைப்பிதழில் 'Bharat' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'India' என்றும் 'Indian Constitution' என்றும், இந்தியில் 'Bharat ka Samvidhan' என்றும் சொல்கிறோம். பாரத் என்ற வார்த்தை நாம் சொல்வதுதான். இதில் புதிதாக என்ன இருக்கிறது? ஆனால், 'இந்தியா' என்ற பெயர் உலகம் அறிந்தது. திடீரென்று என்ன நடந்தது, ஏன் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்?" என்று கேட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்