‘பாரத்' விவகாரம் | “இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி” - மத்திய அமைச்சர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், இந்த புதிய மாற்றம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இது எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. பாரதம்தான் நமது அறிமுகம். அதில் எங்களுக்கு எப்போதுமே பெருமிதம். பாரதம் என்பதற்கு குடியரசுத் தலைவர் முன்னுரிமை அளித்திருக்கிறார். காலனிய ஆதிக்க மனோபாவத்தில் இருந்து வெளிவருவதற்கான மிகப் பெரிய அறிவிப்பு இது" என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "காங்கிரஸ் கட்சி இதனை விமர்சித்துள்ளது. அனைத்தையும் அவர்கள் பிரச்சினையாக ஆக்குகிறார்கள். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. நான் ஒரு பாரதவாசி. எனது நாட்டின் பெயர் பாரதம் என்றுதான் இருந்தது; வரும் காலத்திலும் இது பாரதமாகத்தான் இருக்கும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சினை இருக்குமானால், அவர்கள் தங்களைத் தாங்களேதான் சரிபடுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் கூறுகையில், "இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தைய பயன்படுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் வலியுறுத்துகிறது. நம்மை இழிவாக குறிப்பிடுவதற்காக ஆங்கிலேயர் வைத்த பெயர் இந்தியா. பாரதம் என்ற வார்த்தை நமது கலாச்சாரத்தின் அடையாளம். நமது அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட்டு பாரதம் என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுசில் மோடி, "நமது அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரதம் இரண்டும் இருக்கிறது. இந்திய குடியரசுத் தலைவர் என்றுதான் கடந்து 75 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்தது. பாரத குடியரசுத் தலைவர் என எழுதுவதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது? இந்திய மாதாவுக்கு ஜே என நாம் சொல்வதில்லை. பாரத மாதாவுக்கு ஜே என்றுதான் சொல்கிறோம். இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது. பாரதம் என்று எழுதுவதில் யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் இந்தியா என்று எழுதலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்நடவடிக்கையால் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. வாசிக்க > குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ - மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE