‘இது என்ன நகைச்சுவை?’ - ‘பாரத்’ விவகாரத்தில் ஸ்டாலின், கேஜ்ரிவால், மம்தா கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம்: இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், "சில கட்சிகளின் கூட்டணி இந்தியாவாக மாறினால், நாட்டின் பெயரை மாற்றுவார்களா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. இண்டியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்றினால், இவர்கள் என்ன நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவார்களா? இது என்ன நகைச்சுவையாக உள்ளதே? வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவான வாக்குகள் குறையும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான், அது பாரத் என பெயரை மாற்றி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "நமது அரசியலமைப்பில், 'இந்திய அரசியலமைப்பு' என்பது இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை. மாறாக, 'பாரத்' என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்தியாவின் பெயரை அவர்கள் (மத்திய அரசு) மாற்றியுள்ளனர். ஜி 20 உச்சி மாநாட்டு விருந்து அழைப்பிதழில் 'Bharat' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'India' என்றும் 'Indian Constitution' என்றும், இந்தியில் 'Bharat ka Samvidhan' என்றும் சொல்கிறோம். பாரத் என்ற வார்த்தை நாம் சொல்வதுதான். இதில் புதிதாக என்ன இருக்கிறது? ஆனால், 'இந்தியா' என்ற பெயர் உலகம் அறிந்தது. திடீரென்று என்ன நடந்தது, ஏன் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்?" என்று கேட்டுள்ளார்.

முன்னதாக, ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. | விரிவாக வாசிக்க > குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE