மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தல்: 47 கட்சிகளுக்கு பிஆர்எஸ் கட்சியின் கவிதா கடிதம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நீண்ட காலமாக கிடப்பிலிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 47 கட்சிகளுக்கு பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா கடிதம் எழுதியுள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்எல்சிவுமான கவிதா, பெண்கள் இட ஒக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது குறித்து தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவது தனித்துவமானதில்லை, மாறாக அரசியல் பரப்பில் அதிகமான சமத்துவம் மற்றும் சமநிலையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாகும், அதனால் கட்சி பாகுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு மசோதாவை நிறைவற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் கவிதா, சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தலைமைப் பண்பு மற்றும் வழிநடத்தும் திறன்களை வெளிப்படுத்தியுள்ள பொது வாழ்க்கையில் தீரமுடன் இருக்கும் 14 லட்சம் பெண்களின் கருத்துகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அதிக தீவிரம் காட்டிவரும் கவிதா, மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE