சூரத்தில் துப்பாக்கி முனையில் ரூ.5.53 கோடி வைரம் கொள்ளை - 3 மணி நேரத்தில் 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

சூரத்: சூரத்தில் துப்பாக்கி முனையில் ரூ.5.53 கோடி மதிப்புள்ள வைரத்தை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்றது. தகவல் அறிந்து 3 மணி நேரத்துக்குள் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரம் வைரங்களுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இங்குள்ள சர்தானா பகுதியில் கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் 2 பைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கொண்டு சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அந்த ஊழியர்களை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது. அவர்கள் வைத்திருந்த 2 பைகளையும் துப்பாக்கி முனையில் பறித்துக் கொண்டு கும்பல் தப்பியது. அந்த பைகளில் ரூ.5.53 கோடி மதிப்புள்ள வைரம் இருந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரத் போலீஸார் உடனடியாக மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நவ்சாரி - வல்சாத் நெடுஞ்சாலையில் வல்சாத் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வைரங்களை கொள்ளை அடித்து தப்பிய கும்பல் சிக்கியது. அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்த வைரங்களும் மீட்கப்பட்டன. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், கத்தி களும் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையர்கள் சிக்கிய பகுதி சூரத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.

கொள்ளை நடந்து 3 மணி நேரத்துக்குள் போலீஸார் கும்பலை பிடித்து வைரங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் வல்சாத்தில் இருந்து சூரத் நகருக்கு அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் பக்தி தாக்கர் கூறும்போது, ‘‘கூரியர் ஊழியர்கள் வைர பார்சல்களை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க செல்லும் போது கொள்ளையர்கள் அவற்றை பறித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் வல்சாத் போலீஸார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சென்ற வாகனத்தை சுற்றி வளைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வைரங்கள், உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னர் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE