சென்னை: கல்வி நிறுவனங்களில் தீண்டாமையை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களை சட்டமாக்க வேண்டும் என்று யுஜிசி முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் கூறினார்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு மற்றும் இடஒதுக்கீடு மீறல்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் பேசியதாவது:
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் உயர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள், பிறர் எடுத்த மதிப்பெண், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு, அவர்களின் சாதியைக் கண்டறிகின்றனர். பிறகு அவர்களுடன் பழகக் கூடாது என முடிவெடுத்து ஒதுக்குகின்றனர்.
அவ்வப்போது அவதூறு பேசுவது, மொத்தமாக ஒதுக்கப்படுவது போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பட்டியலின மாணவர்கள், தற்கொலை செய்து கொள்கின்றனர். உயர் வகுப்பினருக்கு ஏராளமான சலுகைகளை சாதிய அமைப்பு கொடுக்கிறது. இதை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.
இதுபோன்ற பிரச்சினைகளைக் களைவதற்காகவே கடந்த 2012-ம் ஆண்டு முக்கிய வழிகாட்டுதல்களை யுஜிசி வழங்கியுள்ளது. எனினும் அதை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செயல்படுத்துவதில்லை. மாணவர்களுக்கும் அது தெரிவதில்லை.
அதன்படி, கல்வி நிறுவனங்களில் சம வாய்ப்பு பிரிவு அமைத்தல், தீண்டாமை ஒழிப்பு அலுவலரை நியமித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தீண்டாமைப் புகார்கள் மீது விசாரணை நடத்தி, தண்டனை வழங்கலாம்.
ஆனால், அனைத்துக் கல்லூரிகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவு மட்டுமே செயல்படுகிறது. இதன் மூலம் நியமனம், சேர்க்கை போன்றவற்றில் இடஒதுக்கீட்டை மட்டுமே உறுதி செய்ய முடியும். இது மட்டுமின்றி, தீண்டாமை ஒழிப்புக்கான யுஜிசியின் வழிகாட்டுதலை, தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டமாக்கி, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், தாங்கள் எதிர்கொள்ளும் தீண்டாமைக் கொடுமைகளை நேரடியாக சக மாணவர்களோடு பேசும் வாய்ப்பை கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். இதுபோன்ற செயல்கள் மூலமாகவே கல்வி நிறுவனங்களில் தீண்டாமையை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago