ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணி சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், "இண்டியா கூட்டணி கடந்த இரண்டு நாட்களாக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். நமது சனாதன தர்மத்தை இவர்கள் இழிவுபடுத்துவது முதல்முறையல்ல.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் வளத்தில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பேசினார். ஆனால், நாம்(பாஜக) ஏழைகள், பழங்குடி மக்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சொல்கிறோம். பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் சனாதனம்தான் நாட்டை ஆளும் என காங்கிரஸ் கூறி இருக்கிறது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைவிட இந்து அமைப்புகள் ஆபத்தானவை என ராகுல் காந்தி கூறி இருக்கிறார்" என தெரிவித்தார்.
இதனிடையே, சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சை நாட்டில் உள்ள 142 கோடி மக்களும் எதிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக அவர் வெறுப்பை விதைத்திருக்கிறார். அவரது உரை எழுதப்பட்டு, வரிக்கு வரி அவரால் பேசப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்புக்கான அழைப்பு. சனாதன தர்மம் என்ற வார்த்தை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முன் உருவானது. சனாதன தர்மம் என்பது நிலையானது; அழிவில்லாதது என்பது பொருள். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றால் எல்லா கோயில்களையும் அழிக்க வேண்டும்; மக்களின் ஆன்மிக பழக்க வழக்கங்களை அழிக்க வேண்டும். சனாதன தர்மத்தை அழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?" என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
உதயநிதியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பிகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி, "உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறார். உதயநிதியின் பேச்சு தேசவிரோத செயல்" என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அணில் அந்தோனி, "உதயநிதியின் பேச்சு அபாயகரமானது. இது ஒரு மதவாத கருத்து. பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இது மற்றுமொரு காரணம். ஆபத்தான, மதவாத, ஊழல் கூட்டணியான இண்டியா கூட்டணியை மக்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago