ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படுகிறது: இஸ்ரோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், வெற்றிகரமாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் நேற்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 125 நாட்கள் பயணம் செய்து விண்கலன் இலக்கை அடையும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் நிலை குறித்து இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது; வெற்றிகரமாக செயல்படுகிறது. ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியைச் சுற்றிச் செல்லும் முதல் சுழற்சி பெங்களூருவில் உள்ள ISTRAC மையத்தில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் சுற்றுப்பாதை 245 கிமீ x 22459 கிமீ ஆகும். அடுத்த சூழற்சி வரும் 5ம் தேதி மாலை 03:00 மணி அளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE