ஆதித்யா எல்1-ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூரியனை ஆராய, இஸ்ரோ முதல்முறையாக அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சூரியனை பற்றிய ஆய்வுக்காகஇஸ்ரோ முதல் முறையாக ஆதித்யா-எல்1 என்ற விண் கலத்தை, பிஎஸ்எல்வி -சி57 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நேற்று காலை 11.50 மணிக்கு அனுப்பியது. சரியாக 63-வது நிமிடத்தில் ஆதித்யா-எல்1 விண்கலம் பிரிந்து புவியின் நீள்வட்ட சுற்று வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது இன்னும் 125 நாட்களில் பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து, சூரியனுக்கு அருகேயுள்ள உள்ள சுற்று வட்டபாதையின் லாக்ராஞ்சியன் புள்ளியில் (எல்1) நிலை நிறுத்தப்படும்.

புதிய பயணம்: ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ‘‘சூரியனை பற்றிய ஆய்வுக்காக இந்தியா முதல்முறையாக ஆதித்யா-எல்1 விண்கலத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்க சாதனை.

இது இந்தியாவின் விண்வெளி திட்டத்தை புதிய பயணத்துக்கு கொண்டு செல்கிறது. இது விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களை சிறப்பாக புரிந்து கொள்ளஉதவும். இந்த சிறப்பான செயலுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் வாழ்த்துகிறேன். இத்திட்டம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘சந்திரயான் - 3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்கிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத்திட்டமான ஆதித்யா -எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். பிரபஞ்சத்தை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும், மனித குலத்தின் நலனுக்காகவும் நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பாராட்டு: காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில்,‘‘சந்திரயான் -3 விண்கலத்தையடுத்து, ஆதித்யா-எல்1-ஐ வெற்றிகரமாக ஏவியதன் மூலம் நாட்டின் கவுரவத்தை இஸ்ரோ மீண்டும் உயர்த்தியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்காக ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பம் பெருமிதம் கொள்கிறது. இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் மற்றொரு பிரம்மாண்டமான சாதனை’’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கட்சி வேறுபாடின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE