ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, "சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் இந்தியா அதன் விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. இந்தியாவின் முதல் சூரியத் திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்குப் பாராட்டுகள். அயராத நமது விஞ்ஞான முயற்சிகள் இந்த பிரபஞ்சத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் பயன்படும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒரு மைல்கல் சாதனை. இது விண்வெளியை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள உதவும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. 63 நிமிடங்களுக்குப் பின்னர் ஆதித்யா எல்-1 விண்கலன் அதன் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டது. | வாசிக்க > வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1: சூரிய இயக்க ஆய்வும் நன்மைகளும் - ஒரு பார்வை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE