முடிந்தவரை ஒரே அணியாக போட்டி - மும்பையில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் | முழு விவரம்

By செய்திப்பிரிவு

மும்பை: மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடுவதாக இண்டியா கூட்டணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவில் இதன் முதல் 2 கூட்டங்கள் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற சூழலிலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், பாஜகவை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், மக்களவை தேர்தலில், முடிந்தவரை தொகுதிபங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பெற்று, ஒரே அணியாக போட்டியிடுவோம் என கூட்டணி தலைவர்கள் தீர்மானமாக அறிவித்தனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

> பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுணர்வுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, கூடிய விரைவில் முடிக்கப்படும். தொகுதி பங்கீடுகுறித்த பேச்சுவார்த்தையை ஒருசில வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்.

> நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரச்சினை குறித்த பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும்.

> ‘ஒன்றாக இணைவோம்; ஒன்றாக வெற்றி பெறுவோம்’ என்ற கருப்பொருளுடன் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளதை இண்டியா கூட்டணி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஒருங்கிணைப்பு குழு அமைக்க, ஒவ்வொரு கட்சியும் ஒருவரது பெயரை அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சரத் பவார், மு.க.ஸ்டாலின், கே.சி.வேணுகோபால், ஹேமந்த் சோரன், அபிஷேக் பானர்ஜி, சஞ்சய் ராவத், தேஜஸ்வி யாதவ் உட்பட 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. பிரச்சாரங்களை திட்டமிட, அதுகுறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட 4 துணை குழுக்கள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா உத்தவ் அணி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ‘‘விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, சீன ஊடுருவல் போன்ற பிரச்சினைகளை நாடு சந்தித்துள்ளது. இவை குறித்து சிறப்பு கூட்டத்தில் ஆலோசித்தால் வரவேற்போம். இப்பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப, இந்த சிறப்பு கூட்டம் பயன்படுத்தப்பட்டால், அது பாஜக பதற்றம் அடைந்துள்ளதை காட்டுகிறது’’ என்றார்.

அக்.2-க்குள் தேர்தல் அறிக்கை: இண்டியா கூட்டணி சார்பில் அக்.2-ம் தேதிக்குள் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறும்போது, ‘‘கூட்டணிக்கு அடையாளச் சின்னம் (‘லோகோ’) மிகவும் முக்கியம். ஆனால், இண்டியா கூட்டணிக்கு சின்னத்தை வெளியிடுவது இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இஸ்ரோவுக்கு பாராட்டு: சந்திரயான்-3 திட்டத்தைவெற்றிகரமாக மேற்கொண்டதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நாடு பெருமைப்படும் வகையில் சாதனை படைத்த இஸ்ரோ குடும்பத்தை இண்டியா கூட்டணி வாழ்த்துகிறது. இஸ்ரோவை உருவாக்கி, அதன் திறனை விரிவுபடுத்த 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. சந்திரயான்-3 வெற்றி, உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆதித்யா-எல்1 ஏவப்படுவதையும் உலக நாடுகள்ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளன. இஸ்ரோவின் சாதனைகள் நமது சமூகத்தின் அறிவியல் உணர்வை வலுப்படுத்தி, நமது இளைஞர்கள் அறிவியல் துறையில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என நம்புகிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்ற தலைவர்கள் பலரும் மக்களவை தேர்தல் முன்கூட்டியே வரும் என்று கருத்து தெரிவித்தனர். பாஜக கூட்டணியின் அதிரடி வியூகங்களை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்